ரயிலின் உணவுப் பெட்டியில் கஞ்சா கடத்தியது அம்பலம்
புதுடில்லி:மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து தலைநகர் டில்லிக்கு ரயிலின் உணவு சமைக்கும் பெட்டியில் மறைத்து கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.துவாரகா 18வது செக்டார் மின்சார அலுவலகம் அருகே, 9ம் தேதி போலீசார் வாகன சோதனை நடத்தினர். இரண்டு பைக் டாக்ஸிகளில் நடத்திய சோதனையில், 29 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அதன் டிரைவர்களான மஞ்சு ஹுசைன், 24, மற்றும் ரகிப் மியான்,24, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.துவாரகா போலீஸ் துணைக் கமிஷனர் அங்கித் சிங் கூறியதாவது:புதுடில்லி அருகே நொய்டா சர்பாபாத் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சு, மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரைச் சேர்ந்த ரகிப் இருவரும் நொய்டா மற்றும் டில்லியில் பைக் டாக்ஸி ஓட்டி வருகின்றனர். கூச் பெஹாரிலிருந்து மொத்தமாக கஞ்சா கொள்முதல் செய்து, எக்ஸ்பிரஸ் ரயில்களின் உணவு சமைக்கும் பெட்டியில் மறைத்து வைத்து டில்லிக்கு கடத்தி வந்துள்ளனர். நொய்டா மற்றும் டில்லியின் பல பகுதிகளில் கஞ்சா சப்ளை செய்துள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயில்களின் உணவு சமைக்கும் பெட்டியில் கஞ்சா கடத்த உதவியவர்கள் குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.