உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முந்தைய ஆட்சியாளர்களுடன் அதீத நெருக்கம்;பலனை அனுபவிக்கும் ஆந்திர அதிகாரிகள்

முந்தைய ஆட்சியாளர்களுடன் அதீத நெருக்கம்;பலனை அனுபவிக்கும் ஆந்திர அதிகாரிகள்

மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி, ஆட்சியை இழந்த பின், அக்கட்சிக்கு விசுவாசமாக இருந்த அதிகாரிகள் பழிவாங்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. பெரும்பாலும் அவர்கள் அதிக முக்கியத்துவம் இல்லாத துறைகளுக்கு மாற்றப்படுவர். சிலர், மிக அரிதாக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவர்.ஆனால், ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி இழந்த பின், ஜெகனுக்கு நிழலாக இருந்த ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்.,கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது மட்டுமின்றி, சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டு

அந்த வரிசையில் முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள், ஐ.பி.எஸ்., அதிகாரிகளான சீதாராமஞ்சனேயுலு, கன்டி ரானா டாடா, விஷால் குன்னி ஆகியோர். மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த நடிகை காதம்பரி ஜெத்வானி என்பவரை, பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்ததாக இவர்கள் மீது புகார் எழுந்தது.மும்பையை சேர்ந்த தொழிலதிபர் மீது நடிகை காதம்பரி பாலியல் குற்றச்சாட்டு அளித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர்.காங்., பிரமுகர் ஒருவர் நடிகை காதம்பரி மீது நில மோசடி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் அடிப்படையில், ஆந்திர ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அவரை கைது செய்தனர். 42 நாட்கள் சிறையில் இருந்த காதம்பரி, ஆந்திர ஆட்சி மாற்றத்துக்கு பின், சந்திரபாபு நாயுடு அரசில் இது குறித்து புகார் அளித்தார்.உடனடியாக நடவடிக்கை பாய்ந்தது. நடிகையை கைது செய்த டி.ஜி.பி., அந்தஸ்திலான அதிகாரி சீதாராமஞ்சனேயுலு தற்போது சிறையில் உள்ளார். மற்ற இரு அதிகாரிகளும் முன்ஜாமின் பெற்றனர். ஆந்திர அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக, சீதாராமஞ்சனேயுலு மீது ஏற்கனவே புகார் உள்ளது. அதிலும் இவர் எக்குத்தப்பாக சிக்கியுள்ளார். அதேபோல, ஜெகன் ஆட்சியில் ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சய் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட்

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைதாகி, 53 நாட்கள் சிறையில் இருந்ததை பக்காவாக திட்டமிட்டு நடத்திக் காட்டியவர் சஞ்சய். அதற்கு பலனாக, தற்போது பேரிடர் மேலாண்மை துறையின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.கடந்த ஆட்சியில் ஜெகனுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி., ரகுராம கிருஷ்ண ராஜு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்தார். ஜெகனின் கண் அசைவை தொடர்ந்து, ரகுராம கிருஷ்ண ராஜு கைது செய்யப்பட்டார். கஸ்டடியில் அவர் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெகனுக்காக இந்த வேலையை செய்த ஐ.பி.எஸ்., அதிகாரி சுனில் குமார் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். அவரால் துன்புறுத்தப்பட்ட ரகுராம கிருஷ்ண ராஜு தான் ஆந்திர சட்டசபையின் துணை சபாநாயகர். இந்த அரசியல் - அதிகாரவர்க்க சண்டையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் தப்பவில்லை.ஆந்திர தலைமை செயலராக நியமிக்கப்பட தேவையான சீனியாரிட்டி இருந்தும், ஜெகன் மோகனுக்கு விசுவாசமாக இருந்த காரணத்துக்காகவே, அந்த வாய்ப்பை இழந்தார் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீலட்சுமி.

முறைகேடு

சந்திரபாபு முதல்வராக பொறுப்பேற்றதும், பூச்செண்டுடன் அவரை வாழ்த்த சென்றார் ஸ்ரீலட்சுமி. ஆனால் அந்த பூச்செண்டை கூட வாங்காமல் முதல்வர் சந்திரபாபு அவரை திருப்பி அனுப்பினார். இரும்பு தாது சுரங்க குத்தகை வழங்கியதில் முறைகேடு செய்ததாக, ஸ்ரீலட்சுமியை, 10 மாதங்கள் சிறையில் அடைத்தார்.ஜெகனின் தனி செயலராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி தனஞ்செய் ரெட்டி, மதுபான ஊழலில் சமீபத்தில் கைதானார். இப்படி ஜெகன் ஆட்சியில் இருந்த அதிகாரிகள் தொடர்ச்சியாக பதவி இழப்பது, கைதாவது தொடர்கிறது. இன்னும் பல கைதுகள் அரங்கேறும் என்றும் கூறப்படுகிறது.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sundaran
மே 28, 2025 23:57

ஆட்சி மாறினால் தமிழக அரசியலிலும் இதை நடத்திக்காட்ட வேண்டும். முதுகெலும்பு இல்லாத ias ips களை தண்டிக்கவேண்டும். ஆளும் கட்சிக்கு ஜால்றா போட்டு கல்லா கட்டுவதிலேயே குறியாக உள்ளனர்


lana
மே 28, 2025 11:10

சிறப்பு. இது போல அடுத்து வரும் அரசு இந்த அரசிடம் நெருக்கமாக இருக்கும் அதிகாரிகள் ஐ இது போல செய்ய வேண்டும். இப்படி ஒரு 10 ஆண்டுகள் நடவடிக்கை எடுத்தால் அதிகாரிகள் யாரும் சட்டம் ஐ மீற பயம் வரும். தேவை இல்லா நெருக்கம் குறையும். ஊழல் குறையும்


புதிய வீடியோ