உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாம்நகர் மன்னர் வாரிசாக அஜய் ஜடேஜா அறிவிப்பு

ஜாம்நகர் மன்னர் வாரிசாக அஜய் ஜடேஜா அறிவிப்பு

ஜாம்நகர் : குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் அரச குடும்பத்தின் வாரிசாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். குஜராத்தின் கட்ச் பகுதியின் வரலாற்று சிறப்புமிக்க ஹலார் பகுதியில் உள்ள ஜாம்நகர் பகுதியை ஆட்சி செய்தவர்கள், ஜடேஜா ரஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள். சுதந்திரத்துக்கு பின், இங்கு மன்னராட்சி அகற்றப்பட்டது. ஜடேஜா வம்சத்தின் தற்போதைய மன்னராக சத்ருசல்யாசின்ஜி திக்விஜய்சின்ஹ்ஜி ஜடேஜா உள்ளார். இவரது சகோதரரான தவுலத்சிங்ஜி ஜடேஜா மூன்று முறை ஜாம்நகர் லோக்சபா எம்.பி.,யாக பணியாற்றி உள்ளார்.இவரது மகனும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அஜய் ஜடேஜா ஜாம்நகர் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சத்ருசல்யாசின்ஜி திக்விஜய்சின்ஹ்ஜி ஜடேஜா நேற்று வெளியிட்டார். அதில், 'தசரா பண்டிகையானது பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்து வெற்றிபெற்ற நாளைக் குறிக்கும் என நம்பப்படுகிறது. இந்த நாளில், என் சங்கடத்திற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது.ஜாம்நகர் மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை அஜய் ஜடேஜா ஏற்றுக்கொண்டது உண்மையிலேயே அதன் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் வீரரான அஜய் ஜடேஜா, 1992 - 2000 வரை நம் நாட்டிற்காக, 196 ஒருநாள் மற்றும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது குடும்பம் மூன்று தலைமுறையாக கிரிக்கெட் விளையாடி வருகிறது. இவரது உறவினர்களான ரஞ்சித்சிங்ஜி, மற்றும் துலிப்சிங்ஜி ஆகியோரின் நினைவாகத் தான் ரஞ்சிக் கோப்பை மற்றும் துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுகின்றன.தற்போதைய மகாராஜா சத்ருசல்யாசின்ஜியும் ஒரு கிரிக்கெட் வீரர். இவர், 1966 - - 67ல் ரஞ்சி டிராபியில் சவுராஷ்டிரா அணிக்கு கேப்டனாக இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ