UPDATED : அக் 27, 2025 12:53 AM | ADDED : அக் 26, 2025 08:19 PM
புதுடில்லி: தேர்தல் கமிஷனர்கள் நாளை மாலை பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர். அப்போது நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பீஹார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருந்ததும், வேறு மாநிலங்களுக்கு நிரந்தரமாக குடியேறியவர்களின் பெயர்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மொத்தம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கு தயாராக இருக்கும்படி மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சில நாட்களுக்கு முன்னர் மாநில தேர்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது பீஹாரில் பின்பற்றப்பட்ட நடைமுறையை தற்போது கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில், தேர்தல் கமிஷனர்கள் நாளை மாலை டில்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர். அப்போது நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.முதல்கட்டமாக விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.