ஜனாதிபதி, பிரதமரிடம் முறையிடுங்க நீதிபதி வர்மா வழக்கில் கோர்ட் கருத்து
புதுடில்லி: டில்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில், போலீஸ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில், கடந்த மார்ச் 14ல் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அப்போது அவருடைய வீட்டின் ஒரு அறையில், மூட்டை மூட்டையாக பணம் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டன.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் அலகாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால், எந்தப் பணியும் ஒதுக்கப்படவில்லை. ஒப்படைப்பு
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதன் அறிக்கைகள் சமீபத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டன. நீதிபதி வீட்டில் கட்டுகட்டாக பணம் இருந்தது அதில் உறுதி செய்யப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, இந்த விவகாரத்தில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்து விசாரிக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்புரா மற்றும் மேலும் மூன்று பேர் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புய்யான் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று கூறியதாவது:இந்த சம்பவம் தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணை அறிக்கை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் என்ன உள்ளது என்பது உங்களுக்கும் தெரியாது; எங்களுக்கும் தெரியாது. தள்ளுபடி
அவ்வாறு அதில் என்ன உள்ளது என்பது தெரியாமல் நடவடிக்கை எடுக்கும்படி, அரசு அதிகாரிகளுக்கு எப்படி உத்தரவிட முடியும்?மேலும், இந்த விவகாரம் தற்போது ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் உள்ளது. முதலில் நீங்கள் அவர்களிடம்தான் நடவடிக்கை எடுக்கும்படி முறையிட வேண்டும். அவ்வாறு அவர்கள் மறுத்தால் மட்டுமே, வழக்கு தொடர முடியும்.அதனால், இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக உள் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும், இந்த வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், விசாரணை முதற்கட்டத்தில் உள்ளதால், எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என, அவற்றை உச்ச நீதிமன்றம் அப்போது தள்ளுபடி செய்திருந்தது.