சாப்ட்வேர் இன்ஜினியருக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க நடுவர் நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி:இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, முழங்காலில் படுகாயம் அடைந்த இன்ஜினியருக்கு, 70 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கி, டில்லி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2015ல் நடந்த விபத்தில், சாப்ட்வேர் இன்ஜினியர் குணால் சிங் என்பவருக்கு, இழப்பீடு வழங்க, டில்லி நடுவர் நீதிமன்றம், இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. குருகிராம் நகரில் பணி முடித்து, வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சாப்ட்வேர் இன்ஜினியர் குணால் சிங் மீது பிக் - அப் வாகனம் ஒன்று மோதியது. அந்த நிறுவனம், சோழமண்டலம் என்ற பொது காப்பீடு நிறுவனத்தில், காப்பீடு பெற்றிருந்தது. இதில், முழங்காலில் படுகாயம் அடைந்த குணால் சிங், இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த மனு, மோட்டார் வாகன விபத்து குறித்து விசாரிக்கும் நடுவர் நீதிமன்றத்தில், அருள் வர்மா தலைமையில் விசாரிக்கப்பட்டது. அவர் பிறப்பித்த உத்தரவில், 45 சதவீதம் படுகாயம் அடைந்து, ஊனம் அடைந்துள்ள அந்த இன்ஜினியருக்கு, சோழமண்டலம் காப்பீடு நிறுவனம், 70 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். இதுகுறித்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் அனுபவித்து வரும் சோகம், எழுத்தில் அடங்காதது. அவருக்கு வழங்கப்படும் இழப்பீடு, அவரின் இழப்பை சற்று குறைக்கும் என்ற ரீதியில், 70 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிடப்படுகிறது' என்றார். மொத்தம், 70 லட்ச ரூபாயை அந்த இன்ஜினியரின் வங்கிக்கணக்கில் டிபாசிட் செய்ய, டில்லி நடுவர் நீதிமன்றம். கடந்த, 16ம் தேதி உத்தரவிட்டது.