பூர்வக்குடி மக்களின் பாதுகாப்புக்கு ஆயுத உரிமம்: அசாம் முடிவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
குவஹாத்தி: அசாமில் பதற்றமான பகுதிகளில் வசிக்கும் பூர்வக்குடி மக்கள், தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான உரிமத்தை பெற பிரத்யேக தளம் உருவாக்கப்படும் என முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா.ஜ., முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியதாவது: அசாமின் பூர்வக்குடி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகங்கள் அளித்த தகவலின்படி துப்ரி, மோரிகான், பார்பெட்டா, நாகவுன் ரூபாஹி, திங், ஜானியா உள்ளிட்ட பகுதிகள் பதற்றம் நிறைந்தவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்காப்பு பயன் பாட்டிற்கு ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரிமத்தை பெற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில், தங்களின் ஆவணங்களை சமர்பித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆக்கிரமிப்பு அகற்றம் அசாமின் கோலாகட் மாவட்டத்தில் உள்ள ரெங்கமா ரிசர்வ் வனப்பகுதிக்கு உட்பட்ட நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இது, சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துவதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் எழுப்பினர். இதையடுத்து, அங்கு வசித்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்புடன் அங்குள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை நேற்று அகற்றினர். இதன் வாயிலாக, வனப்பகுதிக்கு உரிய 329 ஏக்கர் நிலப்பரப்பு மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு வசித்த மக்களுக்கு, மாற்று குடியிருப்பு வசதிகளையும் மாநில அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.