பா.ஜ., அரசுக்கு எதிராக ஏழைகள் திரள வேண்டும் குடிசைவாசிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு
புதுடில்லி:''குடிசைகளை இடித்துத் தள்ளும் பா.ஜ., அரசுக்கு எதிராக வீடுகளை இழந்த ஏழைகள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.தலைநகர் டில்லியில் குடிசைகள் இடிக்கப்பட்டு வருகின்றன. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, ஆம் ஆத்மி சார்பில், ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:குடிசைகளை இடித்துத் தள்ளும் பா.ஜ., அரசுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். வரும் தேர்தல்களில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையுமே மக்கள் நிராகரிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, 'ஜஹான் ஜுக்கி, வஹான் மகன்' என்றார். ஆனால், 'ஜஹான் ஜுக்கி, வஹான் மைதான்' என்பதைத் தான் அவர் மாற்றிச் சொல்லி மக்களை ஏமாற்றி இருக்கிறார். மோடியின் அனைத்து வாக்குறுதிகளுமே பொய். எதிர்காலத்தில் மீண்டும் மக்கள் ஏமாற வேண்டாம்.ஆம் ஆத்மியின், 10 ஆண்டுகால ஆட்சியில் சிறந்த டில்லியை உருவாக்கி விட்டுச் சென்றிருந்தோம். ஆனால், பா.ஜ., அரசு அதை நாசமாக்கி வருகிறது. மின்வெட்டு தினமும் நடக்கிறது. பள்ளிகளில் கல்விக் கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பா.ஜ., அரசின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் டில்லியைக் கொள்ளையடிப்பதில் மும்முரமாக உள்ளனர். வீடுகளை இழந்து தெருவில் நிற்கும் குடிசைவாசிகள் அரசுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். டில்லி மாநகரில் உள்ள, 40 லட்சம் குடிசைவாசிகள் சாலைகளில் இறங்கிப் போராடினால் தான், அரசு தன் இடிப்பு நடவடிக்கையை நிறுத்தும்.இதே ஜந்தர் மந்தரில் இருந்து தான் அண்ணா ஹசாரே இயக்கம் துவங்கியது. காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டது. அதே இடத்தில் இருந்து, ஒரு புதிய இயக்கம் துவக்கி, பா.ஜ.,வின் அதிகாரத்தை அசைப்போம்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஆகிய இரு கட்சிகளும், சகோதர - சகோதரி போன்று இணைந்து விட்டது. மக்களைப் பற்றி அந்தக் கட்சிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை. டில்லியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு இருந்தது. பள்ளிக் கட்டணம் இஷ்டத்துக்கு உயர்த்தப்பட்டன. ஆனால், ஆம் ஆத்மியின் 10 ஆண்டு ஆட்சியில் 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சப்ளை இருந்தது. தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கவில்லை. பா.ஜ. ஆட்சியில் மீண்டும் அவையெல்லாம் நடக்கின்றன.ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கும் பா.ஜ., அரசு, மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மற்றும் சவுரவ் பரத்வாஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்குப் பதிவு விளையாட்டை நிறுத்திவிட்டு மக்களுக்காக பா.ஜ., பாடுபட வேண்டும்.டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதே, தவறுதலாக கூட பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என அறிவுறுத்தி 'வீடியோ' ஒன்றையும் வெளியிட்டேன். அவர்களின் கண்கள் உங்கள் குடிசைகள் மீது உள்ளன என்பதை சுட்டிக் காட்டி இருந்தேன். பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட்டால், ஓராண்டுக்குள் டில்லியில் அனைத்து குடிசைகளையும் அப்புறப்படுத்தி விடுவர் என்று ஆதாரத்தோடு கூறினேன். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற, ஐந்து மாதத்திலேயே குடிசைகளை இடித்து, ஏழைக் குடும்பங்களை தெருவுக்கு அனுப்பி விட்டனர்.இவ்வாறு அவர் பேசினார்.
விரட்டியது யார்?
கொரோனா தொற்று பரவல் காலத்தில், ஏழைகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்ய மத்திய பா.ஜ., அரசு பாடுபட்டபோது, டில்லியில் இருந்து குடிசைவாசிகளை விரட்டியது இதே கெஜ்ரிவால்தான். கடந்த, 10 ஆண்டுகளில் குடிசைவாசிகளுக்கு ஒரு வீட்டையாவது ஆம் ஆத்மி அரசு கட்டிக் கொடுத்துள்ளதா? அவரது பிடிவாதத்தால், நரேலாவில் கட்டப்பட்ட 50,000 வீடுகள் ஏழைகளுக்கு வழங்காமல் சிதிலம் அடைந்து இடிந்து விழுந்தன.- வீரேந்திர சச்தேவா,தலைவர், பா.ஜ., டில்லி
ஆட்சி பறிபோகும்!
டில்லியில் உள்ள, 40 லட்சம் குடிசைவாசிகளும் தெருவில் இறங்கி போராடினால், பெரும்பான்மை இருந்தாலும் பா.ஜ., அரசு வீழ்ந்து விடும். கடந்த ஐந்து மாதங்களாக, டில்லியில் ஏழைகல் வசிக்கும் பகுதிகளில் புல்டோசர்கள் ஓடுகின்றன. டில்லியில் நடக்கும் இந்தச் செயலைப் பற்றி கண்டிக்காமல் காங்கிரஸ் ஏன் அமைதியாக இருக்கிறது? ராகுல் ஏன் இன்னும் இந்த ஏழைகளுக்காக வாய் திறக்கவில்லை? இதுவரை, 10,000 குடிசைகள் இடிக்கப்பட்டு, ஏழைகள் தெருவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். - சவுரவ் பரத்வாஜ்,தலைவர், ஆம் ஆத்மி, டில்லி
இடிப்பு தொடரும்!
ரோஹிங்யா மற்றும் வங்கதேச அகதிகளுக்கான ஆம் ஆத்மி எத்தனை போராட்டம் வேண்டுமானாலும் நடத்தலாம். ஆனால், வெளிநாட்டு அகதிகள் டில்லியில் வசிக்க அனுமதிக்க மாட்டோம். டில்லி மக்களின் வாழ்க்கையை சமரசம் செய்யும் எந்த அரசியலிலும் நாங்கள் ஈடுபடவில்லை. இந்த அகதிகள் தான் டில்லியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களை செய்து வருகின்றனர். அகதிகள் ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகள் இடிக்கப்படும்.- மஞ்ஜிந்தர் சிங் சிர்சா,அமைச்சர், டில்லி