உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாயகம் திரும்பிய விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவுக்கு உற்சாக வரவேற்பு

தாயகம் திரும்பிய விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவுக்கு உற்சாக வரவேற்பு

புதுடில்லி: அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மூவர்ணக் கொடியை அசைத்தும், மேளதாளங்கள் முழங்கியும் மக்கள் அவரை வரவேற்றனர். விண்வெளிக்கு இந்திய வீரர்களை அனுப்பி வைக்கும் இஸ்ரோவின், 'ககன்யான்' கனவு திட்டத்துக்காக தேர்வான நான்கு இந்திய வீரர்களில் ஒருவர் உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா. அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' நிறுவனத்தின், 'ஆக்சியம் - 4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்ட நான்கு பேரில் இவரும் ஒருவர். கடந்த ஜூன் 25ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்டு, மறுநாள், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை இவர்கள் அடைந்தனர். 18 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த இந்தக் குழுவினர், ஜூலை 15ம் தேதி பூமிக்கு திரும்பினர். இதன் மூலம், கடந்த 1984ல் ரஷ்ய விண்கலத்தில் விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் ராகேஷ் சர்மாவுக்குப் பின், 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு பயணித்த இரண்டாவது இந்திய வீரர்; சர்வதேச விண்வெளி மையத்தில் தடம் பதித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுக்லா பெற்றார். புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் மூன்று வாரங்கள் வரை விண்வெளியில் தங்கியிருந்ததால், சிறப்பு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக நான்கு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட சுபான்ஷு சுக்லா, நேற்று தாயகம் வந்தடைந்தார். அவருடன் 'ஆக்சியம் - 4' திட்டத்துக்காக இரண்டாவது வீரராக தேர்வாகியிருந்த பிரசாந்த் பாலகிருஷ்ணனும் உடன் வந்திருந்தார். இருவரையும் டில்லி விமான நிலையத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், டில்லி முதல்வர் ரேகா குப்தா, இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து சிறப்பாக வரவேற்றனர். அப்போது பொதுமக்களும் மூவர்ணக் கொடியை அசைத்து, மேளதாளங்கள் முழங்க சுக்லாவுக்கு உற்சாக வர வேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை