பீஹாரில் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்: ஆர்ஜேடி தொண்டர்கள் அராஜகம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹாரில் துணை முதல்வர் கார் மீது ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் கற்களையும், செருப்பையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என விஜய்குமார் கூறியுள்ளார்.பீஹார் சட்டசபைக்கு முதற்கட்ட தேர்தல் 121 தொகுதிகளில் இன்று நடந்து வருகிறது. 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பாஜவை சேர்ந்த துணை முதல்வர் விஜய் குமார் போட்டியிடும் லக்கிசாராய் தொகுதியும் அடக்கம்.தேர்தல் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில், தொகுதியில் ஓட்டுப்பதிவு குறித்து ஆய்வு செய்ய விஜய் குமார் காரில் கிராமம் கிராமமாக வந்தார். கோரியாரி கிராமத்திற்கு வந்த போது அவரை சூழ்ந்து கொண்ட ராஷ்ட்ரீய ஜனதா தள தொண்டர்கள், கார் மீது தாக்குதல் நடத்தினர். செருப்புகளையும், கற்களையும் வீசிய அவர்கள், 'முர்தாபாத்' என கோஷம் போட்டு கிராமத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனையடுத்து அந்த இடத்துக்கு போலீசார் விரைந்துள்ளனர். முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில் துணை முதல்வர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மிரட்டல்இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பியிடம் மொபைல்போனில் பேசிய விஜய் குமார் கூறுகையில், '' நான் கிராமத்தில் தான் இருக்கிறேன். கூட்டத்தின் என்னை சுற்றி வருகின்றனர். சிறப்பு அதிரடிப்படையினரை அனுப்ப வேண்டும். இங்கு போராட்டம் நடத்துவேன். துணை முதல்வரை செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர். கற்களையும், மாட்டுச்சாணத்தையும் வீசினர். ஆர்ஜேடி குண்டர்களை பாருங்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அவர்கள் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் எனது ஓட்டுச்சாவடி முகவரை மிரட்டி வெளியே விரட்டிவிட்டனர். வாக்காளர்களை வெளியே விட அவர்கள் மறுக்கின்றனர் '' எனத் தெரிவித்தார்.