உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுற்றுலா பயணியரை கவரும்

சுற்றுலா பயணியரை கவரும்

குடகு மாவட்டம் மடிகேரி பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் அமைந்து உள்ளது மடிகேரி கோட்டை. இந்த கோட்டையை, 17ம் நுாற்றாண்டில் அப்போது குடகுவை ஆண்ட முத்துராஜா கட்டினார். இந்த கோட்டைக்குள் மண்ணில் அரண்மனையை கட்டினார்.அதன்பின், 1781ல் இக்கோட்டையை கைப்பற்றிய திப்பு சுல்தான், மண்ணால் செய்யப்பட்ட அரண்மனையை இடித்து, கோட்டை கட்டி, 'ஜாபராபாத்' என பெயரிட்டார். அவரை தொடர்ந்து, 1790ல் தொட்ட வீரராஜேந்திரா, இந்த கோட்டையை தன் வசப்படுத்தினார். 1812 - 14ல் இந்த கோட்டை இரண்டாவது லிங்கராஜேந்திர உடையார் ஆட்சி காலத்தில் மறுசீரமைப்பு செய்தார். 1834ல் இக்கோட்டை, ஆங்கிலேயரின் வசமானது.இந்த கோட்டையின் கட்டட கலை, பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும். கோட்டைக்குள், 110 அடி நீளத்துக்கு, இரண்டு தளத்தில் அரண்மனை கட்டப்பட்டு உள்ளது. 1933ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ், இந்த கோட்டையில், பெரிய கடிகார கோபுரத்தை கட்டினர்.இந்த அரண்மனைக்குள், விஜயராஜேந்திரரின் முதல் எழுத்தில் பொறிக்கப்பட்ட ஆமையின் சிற்பமும் உள்ளது. கோட்டையின் வடகிழக்கு மூலையில், பெரிய சைசில் கல்லால் செதுக்கப்பட்ட இரு யானை சிலைகள், கோட்டைக்குள் நுழையும் சுற்றுலா பயணியரை வரவேற்கிறது. கோட்டையில் சில ரகசிய சுரங்கப்பாதைகள் இருப்பதாக இன்னும் நம்பப்படுகிறது.கோட்டைக்குள் இருந்த வீரபத்ர சுவாமி கோவிலை, 1855ல் ஆங்கிலேயர் அகற்றி, கிறிஸ்துவ தேவாலயத்தை கட்டினர். தற்போது இந்த தேவாலயத்தை, தொல்லியல் துறையினர் அருங்காட்சியகமாக மாற்றி உள்ளனர்.இங்கு, குடகு காலத்தில் துவங்கி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பாவின் சிலையும் இடம் பெற்றுள்ளது. அத்துடன், கோட்டைக்குள் கோட்டே மஹா கணபதி கோவில், மஹாத்மா காந்தி பொது நுாலகமும் அமைந்து உள்ளது.தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை இந்த கோட்டை திறந்திருக்கும். இலவசமாக சுற்றிப்பார்க்கலாம். திங்கட்கிழமை விடுமுறை - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ