தர்ஷன் உட்பட 7 பேருக்கு ஜாமின்
பெங்களூரு: ரசிகரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட ஏழு பேருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.கன்னட நடிகர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படம், வீடியோ அனுப்பியதற்காக, சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா, தர்ஷனின் கூட்டாளிகள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது நீதிமன்றத்தில் 3,991 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இதற்கிடையில், பெங்களூரு சிறையில் தர்ஷனுக்கு ராஜ உபசாரம் கிடைத்தது தெரிய வந்ததால், பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். அவரது கூட்டாளிகள் சிலரும் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.முதுகு வலிக்கு ஆப்பரேஷன் செய்வதற்காக, இடைக்கால ஜாமினில் தர்ஷன் வெளியே வந்தார். இதற்கிடையில் கொலை வழக்கில் ஜாமின் கேட்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தர்ஷன், பவித்ரா, தர்ஷன் கூட்டாளிகள் நாகராஜ், லட்சுமணன், அனுகுமார், ஜெகதீஷ், பிரதோஷ் ஆகிய ஏழு பேர் மனு தாக்கல் செய்தனர்.மனுக்கள் மீது கடந்த மூன்று மாதங்களில், பல முறை விசாரணை நடந்தது. கடந்த 9ம் தேதி இறுதி விசாரணை நடந்தது. இந்த மனுக்கள் மீது நேற்று நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி தீர்ப்பு கூறினார்.தர்ஷன், பவித்ரா உட்பட ஏழு பேருக்கும், ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே கார்த்திக், கேசவமூர்த்தி, நிகில் நாயக், ரவிசங்கர், தீபக் ஆகியோருக்கு ஜாமின் கிடைத்து இருந்தது. பவன், புட்டசாமி, ராகவேந்திரா, நந்திஷ், தன்ராஜ், வினய் ஆகிய ஐந்து பேர் மட்டும் இன்னும் சிறையில் உள்ளனர்.தர்ஷனுக்கு ஜாமின் கிடைத்து இருப்பதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தர்ஷன் படத்திற்கு பாலாபிஷேகம் செய்தனர். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது.