பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதிக்கான தடை நீக்கம்
புதுடில்லி: பாஸ்மதி அல்லாத பிற ரக அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.உள்நாட்டில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், நியாயமான விலையில் அரிசி கிடைப்பதை உறுதி செய்யவும், பாஸ்மதி அல்லாத பிற ரக அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய, 2023 ஜூலையில் மத்திய அரசு தடை விதித்தது.இந்நிலையில், பாஸ்மதி அல்லாத பிற ரக அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதி வரியை, 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் இந்த முடிவை அரிசி ஏற்றுமதியாளர்கள் வரவேற்றனர். இதுகுறித்து, 'ரைஸ் வில்லா' தலைமை செயல் அதிகாரி சூரஜ் அகர்வால் கூறுகையில், “பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியது, துணிச்சலான முடிவு. இது விவசாயத் துறைக்கு புத்துயிர் அளிக்கும். “இந்த நடவடிக்கை ஏற்றுமதியாளர்களின் வருவாயை அதிகரிக்கும். மேலும், வரவிருக்கும் பயிர் பருவத்தில் அதிக வருமானத்தை எதிர்பார்க்கும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும்,” என்றார்.