பரேலி வன்முறை; முஸ்லிம் மதகுரு தவுகீரின் நெருங்கிய கூட்டாளி சிக்கினார்
பரேலி: உத்தர பிரதேசத்தில், முஸ்லிம் பேரணியில் வன்முறை வெடித்த விவகாரத்தில், மதகுரு தவுகீர் ரசா கான் கைதான நிலையில், அவரது நெருங்கிய கூட்டாளி நதீம் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கான்பூர் மாவட் டத்தில் உள்ள ராவத்பூர் என்ற இடத்தில், கடந்த 4ல், மிலாடி நபியையொட்டி, 'ஐ லவ் முகமது' என்ற வாசகம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதற்கு ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, பரேலி மாவட்டத்தில் முஸ்லிம்கள் சமீபத்தில் பேரணி நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்பகுதியில் இருந்த வாகனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன. இந்த பேரணியை துாண்டி விட்டதாகக் கூறி, உள்ளூர் மதகுருவும், இத்தேஹாத்- - இ - -மில்லத் கவுன்சில் தலைவருமான தவுகீர் ரசா கான் உட்பட, 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக, கைதான மதகுரு தவுகீர் ரசா கானின் நெருங்கிய கூட்டாளி நதீமை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'நதீம் தான் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளார். 'வாட்ஸாப்' மூலம் அவர் அழைப்பு விடுத்து உள்ளார். அதன்படியே , 1,000க்கும் மேற்பட்டோர் திரண்டனர். 'தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக நடந்த போராட்டத்தை போல, இந்த பேரணியை நடத்த நதீம் திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது. 'சிறுவர்கள் உட்பட பலரை அவர் தவறாக வழிநடத்தி உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.
மஹா.,வில் போராட்டம்: 30 பேர் கைது
மஹாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள மிலிவாடா என்ற பகுதியில், சாலையோரத்தில் போடப்பட்டிருந்த ரங்கோலி கோலத்தில், 'ஐ லவ் முகமது' என்ற வாசகம் இருந்தது. இதையறிந்த உள்ளூர் முஸ்லிம் இளைஞர்கள், பரபரப்பான அஹில்யாநகர் - -சம்பாஜி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். எனினும் போராட்டத்தை இளைஞர்கள் கைவிடவில்லை. அப்போது அங்கு வந்த போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் வெடித்தது; கல் வீச்சும் நடந்தது. தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர். இது தொடர்பாக, 30 பேர் கைது செய்யப்பட்டனர்.