உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொல்கட்டா பெண் டாக்டர் மரணம் நினைவு பேரணியில் தடியடி

கொல்கட்டா பெண் டாக்டர் மரணம் நினைவு பேரணியில் தடியடி

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், நீதி கேட்டு நடந்த பேரணியில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் நிலவியது. மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில் இயங்கி வரும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர், கடந்தாண்டு ஆக., 8ம் தேதி அதிகாலை மருத்துவமனையின் கருத்தரங்க அறையில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில், மருத்துவமனையில் பணியாற்றிய போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய், இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகள் இந்நிலையில், பயிற்சி டாக்டர் உயிரிழந்து ஓராண்டு ஆன நிலையில், மாபெரும் பேரணிக்கு அவரின் பெற்றோர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி, கொல்கட்டாவில் நேற்று நடந்தது. மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலகமான நபன்னாவை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில், இறந்த டாக்டரின் பெற்றோர், உறவினர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பா.ஜ., மாநில தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட அக்கட்சியினர், கட்சி அடையாளம் இன்றி பேரணியில் பங்கேற்றனர். பேரணிக்கு அனுமதி அளித்த போலீசார், சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். பூங்கா சாலையில் இருந்து சென்றவர்கள், ராணி ராஷ்மோனி சாலை அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். பேரணியில் பங்கேற்றோர் தொடர்ந்து செல்லாத வகையில், இரும்பு தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதை எதிர்பார்க்காத போராட்டக்காரர்கள், இரும்பு தடுப்புகள் மீது ஏறி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும், ஏராளமானோர் முண்டியடித்து சென்றதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஒரு கட்டத்தில், பேரணியில் பங்கேற்றவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இரும்பு தடுப்புகளின் மீது ஏறியவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து போலீசார் தாக்கினர். இதில், பயிற்சி டாக்டரின் பெற்றோர், எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீசாரின் அராஜகத்தை கண்டித்து பா.ஜ.,வினர், பூங்கா தெரு - ஜே.எல்.நேரு சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சுவேந்து அதிகாரி ''பயிற்சி டாக்டர் கொடூரமாக கொல்லப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையிலும், இந்த குற்றத்தில் ஈடுபட்ட பலர் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். ''மாநில முதல்வர் யாரை காப்பாற்றுகிறார். இறந்த பெண் டாக்டருக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். அமைதியாக நடந்த பேரணியில் பங்கேற்ற கூட்டத்தை கண்டு முதல்வர் மம்தா அச்சம் அடைந்துள்ளார். அதனால்தான், தடியடி தாக்குதல் நடத்தப்பட்டது,'' என்றார். பதற்றம் தாக்குதலில் காயமடைந்த இறந்த டாக்டரின் தாயார் கூறுகையில், ''நாங்கள் என்ன தவறு செய்தோம். எங்கள் மகளுக்கு நீதி கேட்டு, தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றோம். ''எங்கள் மீது வலுக்கட்டாயமாக தாக்குதல் நடத்தப்பட்டது. பெண் போலீசார் தாக்கியதில் எனக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ''பாரம்பரியமாக அணிந்து வந்த என் சங்கு வளையல்கள் உடைந்து கைகளிலும் காயம் ஏற்பட்டது. பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுஉள்ளது,'' என்றார். ஹவுராவிலும், பயிற்சி டாக்டர் நினைவு தினத்தை ஒட்டி போராட்டம் நடந்தது. சிறிது துாரம் சென்ற பேரணி, போலீசாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் பங்கேற்க வந்த பலரை மாநிலத்தின் பல பகுதிகளில் போலீசார் தடுத்து நிறுத்தியதால், மேற்கு வங்கம் முழுதும் பதற்றம் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை