கர்னுால்: ஹைதராபாதில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பஸ் மீது பைக் மோதியதில், பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில், 20 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தெலுங்கானாவின் ஹைதராபாதில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு நோக்கி, நான்கு குழந்தைகள் உட்பட 44 பயணியருடன் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் புறப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nxtmtttf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துாக்கம் இந்த பஸ், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு பகுதிக்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை, 2:45 மணியளவில் சென்றபோது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்ட பைக், பஸ்சின் அடியில் சென்று டீசல் டேங்கில் மோதியது. இதில், பஸ் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. சில நிமிடங்களிலேயே பஸ் முழுதும் தீ பரவியது. இச்சம்பவம் அதிகாலையில் நிகழ்ந்ததால் பஸ்சில் இருந்த பெரும்பாலான பயணியர், ஆழ்ந்த துாக் கத்தில் இருந்துள்ளனர். எனினும், தீ பரவியதை உணர்ந்த சில பயணியர் அலறியதுடன், பஸ்சின் கதவை திறக்க முயன்றனர். ஆனால், தீ பரவியதால் அந்த கதவுகளை திறக்க இயலவில்லை. இதனால், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பலர் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த மீட்புப்படையினர், பஸ்சில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், பஸ் முழுதும் தீக்கிரையானது. இந்த விபத்தில், பஸ்சில் இருந்த, 19 பயணியர் உயிரிழந்தது தெரியவந்தது. பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியது. இதனால், உயிரிழந்தோரை அடையாளம் காண, மரபணு மாதிரிகளை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் தெலுங்கானா ஹைதராபாதை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களின் வயது 25 முதல் 35க்குள் இருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணமான பைக்கை ஓட்டி வந்த கர்னுால் மாவட்டத்தின் தண்டரபாடு பகுதியைச் சேர்ந்த கிரானைட் தொழிலாளி சிவசங்கர், 21, என்பவரும் உயிரிழந்தது தெரியவந்தது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் தலா, 2 லட்சம் ரூபாயும், தெலுங்கானா அரசு சார்பில் தலா, 5 லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் இச்சம்பவம் குறித்து மாநில டி.ஐ.ஜி., கோயா பிரவீன் கூறுகையில், “பஸ் தீ விபத்துக்குள்ளானதற்கு டீசல் டேங்கில் பைக் மோதியது தான் காரணமாக இருக்கும் என சந்தேகிக்கிறோம். ''ஆனால், அந்த பஸ்சில் போதுமான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்ற பட்டதா என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. பஸ்சில், தீயணைப்பு கருவி இல்லாதது, அவசர கால கதவுகள் இல்லாதது போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இதுவும் உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என நாங்கள் கருதுகிறோம். இதுபற்றி விசாரணைக்கு உட்படுத்தியுள்ளோம்,'' என்றார். ரூ.23,000 அபராதம்! ஆந்திராவில் தீ விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ், ஒடிஷா பதிவெண் கொண்டது என தெரியவந்துள்ளது. இந்த பஸ் மீது அதிவேகமாக சென்றது, தவறான பாதையில் இயக்கியது, ஆபத்தான முறையில் ஓட்டியது போன்ற குற்றச்சாட்டுக்குள்ளாகி இதுவரை 23,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றியும் விசாரணையை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். வரி ஏய்ப்பு செய்த வெளி மாநில ஆம்னி பஸ்கள் பறிமுதல்! பெங்களூரு, அக். 25- கர்நாடகாவில், வெளி மாநிலங்களின் ஆம்னி பஸ்களை இயக்க வேண்டுமானால், விதிகளின்படி உரிம வரி செலுத்த வேண்டும். ஆனால் வரி செலுத்தாமல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரி ஏய்ப்பு வாகனங்களை கண்டுபிடிக்கும் பணியில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இறங்கினர். போக்குவரத்துத் துறை கூடுதல் கமிஷனர் ஓம் காரேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள், நேற்று அதிகாலை பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த நாகாலாந்து, தமிழகம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தனியார் பஸ்களை நிறுத்தி அவற்றின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, வரி செலுத்தாமல் இயங்கி வந்த வெளி மாநிலங்களின், 25 பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, போக்குவரத்துத் துறை கூடுதல் கமிஷனர் ஓம் காரேஸ்வரி அளித்த பேட்டி: ஓசூர் தேசிய நெடுஞ்சாலை, ஆனேக்கல்லின் அத்திப்பள்ளி செக்போஸ்டில் நேற்று காலை, 4:00 மணியளவில் பெங்களூரின் அனைத்து இணை கமிஷனர்கள், ஆர்.டி.ஓ., அதிகாரிகள், அத்திப்பள்ளி செக்போஸ்ட் அருகில் நின்றிருந்தோம். அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களை ஆய்வு செய்தோம். வெளி மாநிலங்களின் பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் லைசென்ஸ் விதிகளை மீறியுள்ளன. கர்நாடக அரசுக்கு வரி செலுத்தாமல் இயங்கியது தெரிந்தது. வரியை வசூலிப்பதற்காக, பல்வேறு மாநிலங்களின் பஸ்களை, நாங்கள் ஜப்தி செய்தோம். அவற்றில் இருந்த பயணியருக்கு, மாற்று ஏற்பாடு செய்தோம். நாங்கள் யாருக்கும் தொந்தரவு தரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.