| ADDED : ஜூன் 13, 2024 05:47 PM
பெங்களூரு: ''பெங்களூரு புறநகர் ரயில் திட்டப் பணிகள் என்று கூறி தேவையின்றி மரங்களை வெட்டக்கூடாது,'' என, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஞ்சாரியா உத்தரவிட்டுள்ளார்.பெங்களூரில் வெளிப்புறப் பகுதிகளை விரைவில் இணைக்கும் வகையில், பெங்களூரு புறநகர் ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், பென்னிகானஹள்ளி -- சிக்கபானஸ்வாடி இடையில் ரயில் பாதை அமைப்பதற்காக, மாநகராட்சி வனத்துறை அதிகாரிகள் 699 மரங்களை வெட்ட முயற்சிப்பதாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பெங்களூரு சுற்றுச்சூழல் அறக்கட்டளை அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்தது.இந்த மனுவை தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது.மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், 'மரங்களை வெட்டுவதில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மாநகராட்சி கடைபிடிப்பதில்லை. மரங்கள் வெட்டுவது தொடர்பாக மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரியாக பதிவிடுவது இல்லை. தேவையின்றி மரங்கள் வெட்டப்படுகின்றன' என்றார்.மாநகராட்சி தரப்பு வக்கீலும், தனது வாதங்களை முன் வைத்தார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அஞ்சாரியா குறிப்பிட்டதாவது:தேவையின்றி மரங்கள் வெட்டப்படுவதை கன்னடர்கள் விரும்ப மாட்டார்கள். நான் கன்னடர் இல்லை என்றாலும், மரங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. தேவையின்றி மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும். பென்னிகானஹள்ளி -- சிக்கபானஸ்வாடி இடையில், அடுத்த மாதம் 12ம் தேதி வரை மரங்களை வெட்டக்கூடாது.இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார்.இதையடுத்து மனு மீதான விசாரணையை, அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.