உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயியின் வறுமையை போக்கிய வெற்றிலை

விவசாயியின் வறுமையை போக்கிய வெற்றிலை

மருத்துவ குணம் கொண்டது என்பதாலும், பூஜைக்கு அதிகம் பயன்படுத்துவதாலும் வெற்றிலைக்கு எப்போதும் கிராக்கி அதிகம். தமிழகத்தில் கும்பகோணம் மாவட்டத்தில் வெற்றிலை விளைச்சல் அதிகமாக நடக்கிறது. அதுபோல கர்நாடகாவின் தாவணகெரே, துமகூரு, ஹாவேரி, பாகல்கோட், ராம்நகர் மாவட்டங்களில் வெற்றிலை அதிகமாக விளைச்சல் நடக்கிறது.ஆனால் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டம், வறண்ட பூமி என்று அழைக்கப்படும் விஜயபுராவில் வெற்றிலை விளைச்சலில் விவசாயி சாதனை படைத்து வருகிறார். விஜயபுராவின் பசவனபாகேவாடி தாலுகா கன்காலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜும்மண்ணா தளவாய். விவசாயியான இவர், தனக்கு சொந்தமான ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் 3,200 வெற்றிலை கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். வெற்றிலையை சந்தையில் விற்பனை செய்து லாபம் ஈட்டுகிறார்.தனக்கு கிடைக்கும் லாபம் பற்றி ஜும்மண்ணா தளவாய் கூறியதாவது:என் நிலத்தில் முதலில் மக்காசோளம், வெங்காயம் பயிரிட்டேன். அவற்றில் லாபம் கிடைக்கவில்லை. இதனால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. எங்கள் குடும்பம் வறுமையில் வாடியது.இந்நிலையில் எனக்கு தெரிந்த தோட்டக்கலை அதிகாரிகள் சிலர், 'உன் நிலத்தில் வெற்றிலை சாகுபடி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்' என்றனர். இதனால் மஹாராஷ்டிரா சென்று 3,200 வெற்றிலை கன்றுகளை வாங்கி வந்தேன். என் நிலத்தில் 80 அடி நீளம், நான்கு அடி அகலத்தில் 35 பாத்திகள் உருவாக்கி, கன்றுகள் நட்டேன். கன்றுகள் வளர வளர வெற்றிலையும் நன்கு வளர்ந்தது. சந்தைகளில் விற்பனை செய்கிறேன். எல்லா செலவும் போக மாதத்திற்கு 30,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.என் குடும்பம் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு உள்ளது. எங்கள் வறுமையும் நீங்கி உள்ளது. நரேகா திட்டத்தின் கீழ் விவசாயம் செய்கிறேன். அந்த திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.என் தோட்டத்தில் ஐந்து பேர் வேலை செய்கின்றனர். ஒரு காலத்தில், நான் கூலி வேலைக்கு சென்று இருக்கிறேன். இப்போது ஐந்து பேருக்கு வேலை கொடுக்கும் நிலைமைக்கு என்னை உயர்த்தியது வெற்றிலை தான்.இவ்வாறு அவர் பெருமிதத்துடன் கூறினார். - நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை