| ADDED : அக் 05, 2025 03:23 PM
பாட்னா: '' பீஹார் சட்டசபைக்கு நவம்பர் 22ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்,'' என தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.பீஹாரில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தேர்தல் கமிஷனர்கள் அம்மாநிலத்துக்கு சென்றுள்ளனர். அங்கு அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தனர்.இதனைத் தொடர்ந்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்தது. அப்போது அந்தப் பணியுடன் சேர்த்து, 90,217 பூத் அதிகாரிகளும் நாடு முழுவதும் பாராட்டு பெறும் வகையில் சிறப்பான பணியைச் செய்தனர்.வாக்காளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணிகள் வெற்றியடைய வைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். சாத் பாண்டியை உற்சாகமாக கொண்டாடுவது போல், பீஹார் வாக்காளர்கள், ஜனநாயகத்துக்கான திருவிழாவையும் கொண்டாட வேண்டும். தேர்தலில் பங்களிப்பு செய்வதை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டும்.பீஹாரில் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபையின் பதவிக்காலம் நவ.,22 அன்றுடன் முடிவுகிறது. அதற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். முதல்முறையாக பூத் மட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் பயிற்சி வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.