| ADDED : நவ 14, 2025 05:19 PM
புதுடில்லி; பீஹார் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவு தனிப்பெரும் கட்சியாக பாஜ 93 தொகுதிகளில் வெற்றியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. ஆளும் கட்சி கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது என்றபோதும், அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றன என்பது முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.அந்த வகையில் பீஹார் மாநில அரசியலில் தமது சொந்த சாதனையை பாஜ தோற்கடித்து மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. பாஜ, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கை கோர்த்தது.இந்த கூட்டணியினர் தலா 101 தொகுதிகள் என்ற அடிப்படையில் தேர்த்லில் போட்டியிட்டனர். பாஜ தாம் போட்டியிட்ட 101 தொகுதிகளில் 93 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தாம் போட்டியிட்ட 101 தொகுதிகளில் 82 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.கூட்டணியாக இருந்த போதிலும்,பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வரலாற்றில் தனிப்பெரும் கட்சியாக பாஜ உருவெடுத்து உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், பாஜ வெற்றி பெற்ற தொகுதிகள் 74. இம்முறை 100 தொகுதிகளை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இதற்கு முன் நடந்த தேர்தல்களில் பாஜ பெற்ற தொகுதிகளை விட 2025ம் ஆண்டு தேர்தலில் அதிகம்.2005ம் ஆண்டு பாஜவுக்கு கிடைத்தது 37 தொகுதிகள் ஆகும். இதுவே 2010ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 91 ஆக எகிறியது. அதன் பின்னர் 2015ம் ஆண்டு தேர்தலின் போது கொஞ்சம் குறைந்து 53 ஆக இருந்தது. கடந்த 20 ஆண்டுகால சட்டசபை தேர்தல் அரசியலில் பாஜ இம்முறை தான் அதிக தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. இந்த வெற்றி அம்மாநில அரசியலில் பாஜ பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றியாகும். 20 ஆண்டுகளில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள இந்த வளர்ச்சி, அந்த கட்சியின் சாதனையாக கருதப்படுகிறது. 2005ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த தேர்தல் வெற்றியானது மும்முடங்கு வெற்றி என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.