கர்நாடக கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா லோக்சபா தொகுதி, பா.ஜ.,வின் இரும்பு கோட்டையாக இருக்கிறது. 2009ல் மறுசீரமைப்பின் போது, தொகுதி உருவானது முதல் இப்போது வரை நான்கு லோக்சபா தேர்தல் நடந்துள்ளன.இதில், 2009, 2014, 2019 ஆகிய மூன்று தேர்தலில், நளின்குமார் கட்டீல் தொடர்ந்து வெற்றி பெற்று, ஆதிக்கம் செலுத்தினார். 2024லிலும் அவருக்கே வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்பட்டது. ஆனால், பா.ஜ., மேலிடம், மாவட்ட பொது செயலர் பிரிஜேஷ் சவுடாவுக்கு வாய்ப்பு வழங்கியது; அவரும் வெற்றி பெற்றார். அலட்சியம்
எம்.பி.,யாக இருந்த போது, பிரிஜேஷ் சவுடாவை, நளின் குமார் கட்டீல் அவ்வளவாக கண்டுகொள்ளாமல், அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், தற்போது நளின்குமார் கட்டீலை, பிரிஜேஷ் சவுடா அலட்சியப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.கட்சி செயல்பாடுகளில் முக்கியத்துவம் தராமல் ஓரங்கட்டப்படுகிறார். மாநில தலைவராக இருந்த என்னையே அலட்சியபடுத்துகிறாயா என்று, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் கட்சி மேலிடத்தின் கவனத்துக்கு நளின்குமார் கட்டீல் கொண்டு சென்றுள்ளார்.இதனால், இரு தரப்பினிரிடையே கடந்த மூன்று மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இரு கோஷ்டிகளாக பா.ஜ., பிளவுபட்டுள்ளது. பா.ஜ., தேசிய அமைப்பு பொது செயலர் சந்தோஷுடன் காணப்படும் சில ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள், நளின்குமார் கட்டீலுக்கு ஆதரவாக இருக்கின்றனர். குழப்பம்
மாநில தலைவர் விஜயேந்திரா, ஆர்.எஸ்.எஸ்., மூத்த பிரமுகர் கல்லட்கா பிரபாகர் பட் ஆகியோரின் ஆதரவாளர்கள், பிரிஜேஷ் சவுடாவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். இது, கட்சி தொண்டர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. யாருடைய பேச்சை கேட்பது என்று தெரியாமல் உள்ளனர்.இதற்கிடையில், தட்சிண கன்னடா உள்ளாட்சி அமைப்புகள் மூலம் எம்.எல்.சி., பதவிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் வெற்றி வியூகம் வகுப்பதற்காக, மாநில தலைவர் விஜயேந்திரா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி ஆகியோர் பெங்களூரில் இருந்து, நேற்று மங்களூரு சென்றனர்.அப்போது, எம்.பி., பிரிஜேஷ் சவுடா தலைமையில், தலைவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திலும், நளின்குமார் கட்டீல் பங்கேற்கவில்லை. மற்றபடி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி மாவட்டங்களை சேர்ந்த கட்சி தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.'இப்படியே மோதல் நீடித்தால் இரும்பு கோட்டையை தகர்க்க, காங்கிரஸ் முயற்சிக்கும். இதை இப்போதே தடுத்தால் மட்டுமே பா.ஜ., கோட்டையை பாதுகாக்க முடியும்' என்பது மூத்த தலைவர்களின் கருத்தாக உள்ளது. - நமது நிருபர் -