மின்வெட்டு விவகாரம் பா.ஜ., - ஆம் ஆத்மி மோதல்
ஜனக்புரி:மின்வெட்டு தொடர்பாக ஆளும் பா.ஜ.,வை எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியுள்ளது.நகரில் மின்வெட்டு அதிகம் இருப்பதாக எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டி வருகிறது. நேற்று மாநில மின்சார துறை அமைச்சர் ஆதிஷ் சூட்டின் சொந்தத் தொகுதியான ஜனக்புரிக்கு உட்பட்ட மகாவீர் என்க்ளேவுக்கு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான ஆதிஷி மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் சென்று, மக்களிடம் குறைகளை கேட்டனர்.அப்போது, “இது டில்லியின் ஏதோ ஒரு தொலைதுார மூலையில் இல்லை. இது மின்சார அமைச்சரின் தொகுதி. மின்வெட்டால் நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இங்கு நிலைமை இப்படி இருந்தால், நகரத்தின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கும்?” ஆதிஷி கேள்வி எழுப்பினார்.இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, “ஆம் ஆத்மி கட்சி, சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களைப் பரப்புகிறது. அரவிந்த் கெஜ்ரிவால், சவுரப் பரத்வாஜ், ஆதிஷி ஆகியோர் வேண்டுமென்றே பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றனர். பா.ஜ.,வின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் முயற்சிக்கின்றனர். அரசியல் லாபத்திற்காக மின்வெட்டைப் பயன்படுத்துகிறார்கள்,” என்றார்.