பிரதமரின் தாயை அவமதித்த லாலு கட்சியினர்: பா.ஜ., கண்டனம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பிரதமர் மோடியின் தாயை 'இண்டி' கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத்தினர் அவமதித்ததற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் காங்கிரசார், பீஹாரில் பல்வேறு இடங்களில் வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தினர். இதில், ஓட்டு திருட்டு புகார்களை எழுப்பினர். தர்பங்கா மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயை மோசமான வார்த்தைகளால் திட்டினார். இதற்கு பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மீண்டும் பிரதமர் மோடியின் தாயை பீஹாரில் இண்டி கூட்டணியினர் அவமதித்ததாக பா.ஜ., குற்றஞ் சாட்டியுள்ளது. இது குறித்து பா.ஜ., வைச் சேர்ந்த பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறுகையில், “பிரதமர் மோடியின் மறைந்த தாயை மீண்டும் அவமானப்படுத்தியுள்ளனர். இந்த முறை அதை ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் செய்துள்ளனர் . “தேஜஸ்வி அவர்களை ஊக்குவித்து வருகிறார். அவர்களின் இந்த திமிர் தனத்திற்கு, பீஹாரின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தக்க பதிலடி தருவர். இந்த சம்பவத்திற்கு ராகுல் மற்றும் தேஜஸ்வி இருவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார். இந்த குற்றச்சாட்டை ராஷ்ட்ரீய ஜனதா தளம் மறுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சித்தரஞ்சன் ககன் வெளியிட்ட அறிக்கையில், 'ஓட்டு மற்றும் முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப பா.ஜ., முயற்சிக்கிறது. அதற்காக திரிக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு, எங்கள் கட்சி மீது பழி சுமத்துகிறது' என கூறியுள்ளார்.