சூரத்: குஜராத்தில் உள்ள சூரத் லோக்சபா தொகுதி வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வானார்.குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 26 லோக்சபா தொகுதிகளுக்கு, மே 7ல் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.இங்கு, கடந்த 12ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. அதை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள், ஏப்., 22ம் தேதி. இந்நிலையில், சூரத் லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் முகேஷ் தலால் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.இவரை எதிர்த்து, காங்., சார்பில் நிலேஷ் கும்பானி வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகளில் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, நேற்று முன்தினம் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.தொடர்ந்து, காங்., சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்சலா வேட்புமனு தாக்கல் செய்தார். எனினும், இவரது வேட்புமனுவும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.இதற்கிடையே, சூரத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நான்கு சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் சார்பில் யாரேலால் பார்தி உள்ளிட்டோர், தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதாக நேற்று அறிவித்தனர்.இந்நிலையில், முகேஷ் தலாலை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக, தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான சவுரப் பார்தி அறிவித்தார்.தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழையும், முகேஷிடம் அவர் வழங்கினார். குஜராத்தில், சூரத் தொகுதியை தவிர்த்து, மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு மே 7 ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.மேட்ச் பிக்சிங்:
இது குறித்து காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: சூரத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள், பா.ஜ., மீது கடும் கோபத்தில் உள்ளனர்.கடந்த 1984 முதல் இத்தொகுதியில் அவர்கள் பெற்றி பெற்று வந்தாலும், இந்த முறை தோற்று விடுவோம் என்ற காரணத்தால், 'மேட்ச் பிக்சிங்' செய்து, காங்., வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரிக்க வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.இது போன்று இதற்கு முன் நடந்துள்ள நிகழ்வுககள் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. அதன் விவரம்
* நாடு சுதந்திரத்திற்கு பின் 1951-ல் லோக்சபாவிற்கு நடந்த முதல் பொதுத்தேர்தலில் 10 வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். பின் 1957 தேர்தலில் 11 பேர் போட்டியின்றி பெற்றனர்.* கடந்த 1962 லோக்சபா தேர்தலில் மூன்று பேரும், 1967 லோக்சபா தேர்தலில் 5 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.* 1962-ல் தமிழகத்தின் திருச்செந்தூர் லோக்சபா தொகுதிக்கு டி.கே. கிருஷ்ணமாச்சாரி போட்டியின்றி வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.* கடந்த 1971 ஒருவர், 1977-ல் இரண்டு பேர், 1984-ல் ஒருவர் என லோக்சபா எம்.பி.க்களாக போட்டியின்றி வெற்றி பெற்றனர்.* 1989ம் ஆண்டு ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுகட்சி தலைவரும்,ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, மஹாரஷ்டிரா நாசிக் தொகுதியில் போட்டியிட்ட ஓய்.பி. சவான் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.* 2012-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி உபி. மாநிலம் கணோஜ் லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அப்போதைய முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியின்றி எம்.பி.யாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து பா.ஜ., காங்., மற்றும் இதர கட்சி வேட்பாளர்கள் திடீரென வாபஸ் பெற்றனர்.* 2024ல் சூரத் தொகுதியில் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.எனவே இதுவரை லோக்சபா தேர்தலுக்கு முன் போட்டியின்றி 35 வேட்பாளர்கள் வெற்றி பெற்ற கடந்த வரலாற்று நிகழ்வுகளுடன் வைத்து பார்க்கும் போது தற்போதைய நிகழ்வு அரிதானதல்ல, என்பதால் 2024 சூரத் லோக்சபா தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள முகேஷ் தலால் வெற்றி அதிசயமானதல்ல என கூறப்படுகிறது.