மோடி, அமித் ஷா, ஆதித்யநாத் பேரணி தேர்தல் பிரசார வியூகம் வகுக்கிறது பா.ஜ.,
சாணக்யாபுரி:சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பேரணி நடத்தி, தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர்.சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் பா.ஜ., மேற்கொண்டு வருகிறது. 1998 முதல் எதிர்க்கட்சியாக பா.ஜ., உள்ளது.அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு திட்டங்களை மாநில பா.ஜ., வகுத்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்த பா.ஜ., நேற்று இரண்டாவது தேர்தல் அறிக்கையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.இந்நிலையில் தேர்தல் பிரசாரத்திலும் அதிரடி காட்ட மாநில பா.ஜ., தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை பிரசாரத்திற்கு அழைத்து வரத் திட்டமிடப்பட்டுள்ளது.வடகிழக்கு டில்லியில் உள்ள யமுனா காதர், கிழக்கு டில்லியில் உள்ள கர்கர்டூமா, மேற்கு டில்லியில் உள்ள துவாரகாவிற்கு அருகே என முக்கியமான மூன்று இடங்களில் பிரதமர் மோடியை உரையாற்றவும் பேரணி நடத்தவும் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.உ.பி., முதல்வர் 15 பொதுக்கூட்டங்களில் உரையாற்றவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா நான்கு பேரணிகளில் பங்கேற்று உரையாற்றவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இவர்களைத் தவிர பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களையும் அழைத்து வர மாநில பா.ஜ., திட்டமிட்டுள்ளது.தேர்தலுக்கான தொடர் பேரணிகளை நடத்துவதன் மூலம் பிரசார களத்தில் மின்னல் வேகத்தைக் காட்ட பா.ஜ., முயல்கிறது என, கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ஹர்தீப் பூரி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட 40 நட்சத்திர பிரசாரகர்கள் பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக முழுவீச்சில் பிரசாரம் செய்ய உள்ளனர்.அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் தாமி, மகாராஷ்டிராவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் டில்லிக்கு வர உள்ளனர்.