ராஞ்சி: ''பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஜார்க்கண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். ஆனால், பழங்குடியினர் அதன் வரம்பிற்குள் கொண்டு வரப்பட மாட்டார்கள்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இம்மாநில சட்டசபைக்கு, வரும் 13, 20ல் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 23ல் முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:ஹேமந்த் சோரன் ஆட்சியில், அண்டை நாட்டவர்களின் ஊடுருவலால் ஜார்க்கண்ட் மக்கள் பாதுகாப்பு இன்றி தவிக்கின்றனர். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்காரர்களை தடுத்து நிறுத்துவோம். பழங்குடியின பெண்களை ஊடுருவல்காரர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களின் நிலத்தை அபகரிக்கின்றனர். இதனால், பழங்குடியினத்தவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தவில்லை எனில், ஜார்க்கண்டின் கலாசாரம், வேலை வாய்ப்பு, நிலம் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. தாஜா செய்யும் அரசியலுக்காக ஜார்க்கண்ட் அரசு எல்லை மீறி செயல்படுகிறது. லோஹர்தாகாவில் பக்தர்கள் தாக்கப்பட்டனர். ராமநவமியின் போது, கீர்த்தனைகள், பஜனைகளுக்கு தடை விதிக்கப்பட்டன. ராமநவமி ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்டன. சாஹிப்கஞ்ச் மற்றும் ஜம்ஷெட்பூரில் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. இதற்காக மாநில அரசு வெட்கப்பட வேண்டும்.பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஜார்க்கண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். அதே நேரம், பழங்குடியினர் அதன் வரம்பிற்குள் வரமாட்டார்கள்.பெண்களுக்கு மாதம், 2,100 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். தீபாவளி மற்றும் ரக் ஷா பந்தன் பண்டிகைகளின்போது ஆண்டுக்கு இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். இளைஞர்களுக்கு 5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். வினாத்தாள் லீக் விவகாரத்தால் மாநில இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், குற்றவாளிகளை தலைகீழாக தொங்கவிடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.
500 ரூபாய்க்கு சிலிண்டர்
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். ஆண்டுக்கு இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் ஊடுருவல்காரர்களால் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, பழங்குடியினரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் பழங்குடியினரை திருமணம் செய்யும் ஊடுருவல்காரர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, பழங்குடியினர் அந்தஸ்து வழங்கப்படாது பொது சிவில் சட்ட வரம்பில் இருந்து பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கப்படும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் அரசுத்துறைகளில், 2.87 லட்சம் பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்படும் அனைத்து தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை வெளியிடப்படும்.