ஜம்முகாஷ்மீர் தேர்தலில் பா.ஜ., முக்கிய அறிவிப்பு..! முதலில் லிஸ்ட்.. பின்னாடி டுவிஸ்ட்
ஸ்ரீநகர்; ஜம்முகாஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.,வெளியிட்டு, சிறிது நேரத்திலேயே வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.ஜம்முகாஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 1ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன. இம்முறை, தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள பா.ஜ., தேர்தல் வேலைகளில் மற்றக் கட்சிகளைக் காட்டிலும் வேகமாக பணியாற்றி வருகிறது. இந் நிலையில் தேர்தலில் களம் இறங்கும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ., தலைமை அறிவித்துள்ளது. அதில் மொத்தம் 44 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். முக்கிய பிரமுகர்களான அர்ஷித் பட் ராஜ்புரா தொகுதியிலும், ஜாவேத் அகமது கத்ரி சோபியான் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். முகமது ரபிக் வானி அனந்த்நாக் மேற்கு தொகுதியில் களம் காண்கிறார். கிஷ்துவார் தொகுதியில் சுஷ்ரி ஷாகுன் பரிஹார் போட்டியிடுகிறார். இதனிடையே, வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அதை வாபஸ் பெறுவதாக பா.ஜ., அறிவித்துள்ளது. மீண்டும் புதிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறி உள்ளது.ஜம்முகாஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், அங்கு முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது, குறிப்பிடத்தக்கது.