UPDATED : செப் 24, 2026 11:29 PM | ADDED : செப் 24, 2026 10:43 PM
புதுடில்லி: “அரசியலில், நமக்கு எவ்வளவு பெரிய அதிகாரம் கிடைத்தாலும், பா.ஜ., ஒருபோதும் சேவை செய்யும் பாதையில் இருந்து விலகாது,” என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் 76வது பிறந்தநாள் மற்றும் அவரது 25 ஆண்டுகால பொது வாழ்வைக் கொண்டாடும் விதமாக பா.ஜ., சார்பில் 'சேவா சங்கல்ப் யாத்திரை' நடத்தப்படுகிறது. பிரதமரின் பிறந்த இடமான குஜராத்தின் வத்நகரில் தொடங்கி, அவரது லோக்சபா தொகுதியான உத்தர பிரதேசத்தின் வாரணாசி வரை இந்த யாத்திரை பயணிக்கிறது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த யாத்திரையில் பங்கேற்ற நபர்கள், மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தனர். அப்போது, டில்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து அவர்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது: அரசியல், தேர்தல்கள், ஆட்சி போன்றவை அவற்றிற்குரிய இடத்தை கொண்டுள்ளன. ஆனால், பா.ஜ.,வின் அடித்தளமும் நோக்கமும் தேசத்தை கட்டி எழுப்புவதும், நம் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதும் தான். நமக்கு எவ்வளவு பெரிய அரசியல் அதிகாரம் கிடைத்தாலும், பா.ஜ., ஒருபோதும் சேவை செய்யும் பாதையில் இருந்து மாறாது. குஜராத் முதல் டில்லி வரை பா.ஜ.,வின் நிர்வாகத்திற்கும் அதன் கொள்கைகளுக்கும் சேவை ஒன்றே வழிகாட்டும் கொள்கையாக இருந்து வருகிறது. என் வாழ்க்கை, எப்போதும் மக்களின் ஆசிர்வாதங்களாலும் அன்பினாலும் வழிநடத்தப்பட்டு வருகிறது. என் வாழ்வின் தாரக மந்திரமாக எப்போதுமே பொது சேவையே இருந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.