பீஹார் சபாநாயகரானார் பா.ஜ.,வின் பிரேம் குமார்
பாட்னா: பீஹாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா .ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கடந்த 20ல், பீஹார் முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், 10வது முறையாக பதவியேற்றார். சட்டசபைக்கு தேர்வான புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நரேந்திர நாராயண் யாதவ், இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் நடந்த சிறப்பு சட்டசபை கூட்டத்தில், புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் நேற்று, பீஹார் சட்டசபை சபாநாயகர் தேர்தல் நடந்தது. ஆளும் தே.ஜ., கூட்டணி சார்பில், பா.ஜ., மூத்த தலைவர் பிரேம் குமார் மட்டுமே வேட்பாளராக நிறுத்தப்பட்டார். குரல் ஓட்டெடுப்பு மூலம் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.