இலவச மோர் வழங்கும் பி.எம்.டி.சி., ஊழியர்கள்
பெங்களூரு : வெப்பத்தால் அவதிப்படும் பயணியர், பஸ் ஓட்டுநர், நடத்துநர்களின் தாகத்தை தணிக்க, பி.எம்.டி.சி., டிப்போ ஒன்றில், இலவச மோர் வழங்கப்படுகிறது.கர்நாடகாவில் நாளுக்கு நாள், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே தலை காட்ட முடியாத சூழ்நிலை நிலவுகிறது. பணி நிமித்தமாக வெளியே நடமாடும் மக்கள் வெயிலை தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதை மனதில் கொண்டு பி.எம்.டி.சி., டிப்போ ஒன்றில், இலவச மோர் வழங்கப்படுகிறது.பெங்களூரு, ராஜாஜி நகரின் பி.எம்.டி.சி., டிப்போ 21ல் பணியாற்றும் ஊழியர்கள், தங்கள் செலவில் தினமும் 25 லிட்டர் மோர் தயாரித்து இலவசமாக வினியோகிக்கின்றனர். பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பயணியர் மட்டுமின்றி சுற்றுப்புறங்களில் பணியாற்றும் முதியவர்களுக்கும் மோர் வழங்குகின்றனர்.டிப்போ ஊழியர்களின் சேவைக்கு, சில நேரங்களில் தொண்டு அமைப்பினரும் உதவுகின்றனர். மோர் வினியோகிக்கும் இடத்தில், 'எல்இடி' திரை பொருத்தப்பட்டுள்ளது. அந்தந்த நாட்களில் மோர் வினியோகிக்க உதவியவர் பற்றிய தகவல் வெளியிடப்படுகிறது.தங்களின் பிறந்த நாள், திருமண நாள் அல்லது சிறப்பு நாட்களில், ஊழியர்கள் மோர் வினியோகிக்கும் பொறுப்பை ஏற்கின்றனர்.கடந்தாண்டு கோடைக் காலத்திலும் கூட டிப்போ ஊழியர்கள் மோர் வினியோகித்தனர்; இம்முறையும் தொடர்கின்றனர். தினமும் காலை 11:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை வெயிலுக்கு இதமாக மோர் வினியோகிக்கப்படுகிறது. இவர்களின் பணியை பொது மக்கள் பாராட்டுகின்றனர்.