பாய்லர் வெடித்து 2 ஊழியர்கள் பலி
பரூச்: குஜராத்தின் பரூச் மாவட்டத்தின் சாய்கா பகுதியில் உள்ள தொழில்துறை எஸ்டேட் பகுதியில் மருந்து தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு நேற்று அதிகாலை ஏராளமான ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த கொதிகலன் ஒன்று வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்து சேதமடைந்தது. சத்தம் கேட்டு பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இரு ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்; 20 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து போலீசாருடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரு ஊழியர்கள் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஒரு ஊழியர் மாயமாகியுள்ளதால் அவர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.