புறக்காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்
காஜியாபாத்: டில்லி அருகே உ.பி.,யின் காஜியாபாதில், புறக்காவல் நிலையத்தில் இன்று (நவ.,7) நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்தார். உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத், இந்திரா புரம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில், வசுந்தராவில் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. நேற்று முன் தினம் இரவு, புறக்காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. அப்போது, அங்கிருந்த உணவு வினியோக ஊழியர் காயம் அடைந்தார். தகவல் அறிந்து, பயங்கரவாத தடுப்புப் படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். வெடித்த பொருள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு, ‘தெஹ்ரிக் உல் முஜாஹிதீன்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடி துண்டுகள், ஆக்ராவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதி முழுதும் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.