உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூணாறில் உணவு ஒவ்வாமையால் சிறுவன் பலி: ஓட்டலுக்கு பூட்டு

மூணாறில் உணவு ஒவ்வாமையால் சிறுவன் பலி: ஓட்டலுக்கு பூட்டு

மூணாறு:கேரளா பத்தனம்திட்டா மாவட்டம் அடூரில் இருந்து உறவினர்களுடன் மூணாறு சுற்றுலா வந்து திரும்பிய சிறுவன் ஓட்டல் உணவால் ஒவ்வாமை ஏற்பட்டு இறந்தார்.அடூர் அருகே சூரக்குழா பகுதியைச் சேர்ந்த சுகாதாரதுறை அதிகாரி அஜயன். இவர், குடும்பத்துடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தபோது அண்ணன் விஜயனின் மகன்கள் இருவரையும் அழைத்து வந்தார். மூணாறில் சுற்றுலாவை முடித்து விட்டு நேற்று முன்தினம் மாலை சொந்த ஊர் திரும்பினர். அஜயனின் அண்ணன் மகன் வைசாக் 9, க்கு வழியில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் பயணத்தை தொடர்ந்தனர். எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் நெருங்கியபோது வைசாக்கின் உடல்நிலை மிகவும் மோசமானதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வைசாக் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இரண்டு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக தெரியவந்தது.ஆய்வு: மூணாறில் இருந்து அஜயன் சொந்த ஊர் திரும்புகையில் காலனி ரோட்டில் பிரபல ஓட்டலில் சப்பாத்தி, சிக்கன் கறி பார்சல் வாங்கியுள்ளார். அதனை வழியில் சாப்பிட்டனர். அதனால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என கருதி தேவிகுளம் தாலுகா உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆன்மரியா நேற்று சமந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு நடத்தினார். தற்காலிகமாக ஓட்டலை பூட்டுமாறு உத்தரவிட்டவர் சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகள் வழியில் ஓட்டல்களில் ஏதேனும் சாப்பிட வாய்ப்புள்ளதால், பார்சல் வாங்கி சென்ற உணவால் ஒவ்வாமை ஏற்பட்டதாக கூற இயலாது என்றார்.கோதமங்கலம் போலீசார் அளித்த தகவல்படி மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.அலட்சியம்: சுற்றுலா நகரான மூணாறில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை, சுகாதாரதுறை அதிகாரிகள் ஆய்வு நடத்துவது இல்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் பல ஓட்டல்கள் சுகாதாரம் இன்றி உள்ளன. தவிர பெரும்பாலான ஓட்டல்களில் சப்பாத்தி நேரடியாக தயாரிப்பது இல்லை. மாறாக ' ரெடிமேட்' சப்பாத்தி பயன்படுத்தப்படுகிறது. அவை ராஜாக்காடு, பெரம்பாவூர், ஆலுவா ஆகிய பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ