பக்சார்: பீஹாரில், மண மேடையில் இருந்த மணப்பெண்ணை முன்விரோதம் காரணமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர். பீஹாரில், உள்ள பக்சார் நகரைச் சேர்ந்த ஆர்த்தி குமாரிக்கு, உத்தர பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. வரவேற்பு விழா இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதற்கான வரவேற்பு விழா, நேற்று முன் தினம் இரவு முதல் ஆர்த்தி வீட்டில் களைக்கட்டியது. அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில், திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடந்தன. ஆர்த்தியின் சகோதரி, மேடையில் இருந்த மணமக்களுக்கு திருமண சடங்குகளை மேற்கொண்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், திடீரென மணமக்கள் முன்னிலையில் வந்து, ஆர்த்தியை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், ஆர்த்தியின் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, திருமண விழாவிற்கு வந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, துப்பாக்கியால் சுட்ட நபரும் தப்பி ஓடினார். படுகாயமடைந்த ஆர்த்தி, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருதலை காதல் இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பக்சார் நகர போலீசார், துப்பாக்கியால் சுட்ட நபர் குறித்து விசாரணை நடத்தினர். இதில், தப்பியோடியவர் பெயர் தீனபந்து என்பதும், அவர் ஆர்த்தியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஒருதலைக் காதல் விவகாரத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறிய போலீசார், தப்பியோடிய தீனபந்துவை தேடி வருகின்றனர்.