அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க கோரிக்கை
புதுடில்லி: இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, அமெரிக்கா அபாண்டமாக 50 சதவீத அளவுக்கு வரி விதித்த நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற எதிர்ப்பு குரல்கள் வலுவாக எழுந்துள்ளன. இந்தியாவில் மெக்டொனால்டு, பெப்சி கோ, அமேசான், ஆப்பிள் போன்ற அமெரிக்காவின் பெரு நிறுவனங்கள் காலுான்றி இருக்கின்றன. அந்நிறுவனங்களுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக விளங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய பொருட்களுக்கு, அமெரிக்கா அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்திருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் விற்கப்படும் அமெரிக்கப் பொருட்களை புறக்கணித்து நம் தேசத்தையும், தேசப் பற்றையும் உயர்த்துவோம் என்ற குரல்கள் சமூக ஊடகங்களில் வலுத்து வருகின்றன. இந்தியாவின், 'வாவ் ஸ்கின் சயின்ஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனரான மணிஷ் சவுத்ரி லிங்டுஇன் தளத்தில் விவசாயிகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வைத்திருப்போருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வீடியோவில் வெளியிட்டிருந்தார். அதில், 'இந்தியாவில் தயாரிப்போம் என்பதை உலக அளவில் நாம் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளார். 'தென்கொரியாவின் உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் உலக அளவில் மிகவும் பிரசித்தம். அதே போல, இந்திய பொருட்களையும் பிரபலமாக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.