உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனடா அமைச்சர் - பிரதமர் மோடி சந்திப்பு; இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி

கனடா அமைச்சர் - பிரதமர் மோடி சந்திப்பு; இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி

புதுடில்லி : அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். வட அமெரிக்கா நாடானா கனடாவின் வெளியுறவு அமைச்சராக, இந்திய வம்சவாளியான அனிதா ஆனந்த் கடந்த மே மாதம் பொறுப்பேற்றார். அமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக, அவர் நேற்று முன்தினம் டில்லி வந்தார். விமான நிலையத்தில். அனிதா ஆனந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடியை, அனிதா ஆனந்த் டில்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா - கனடா இடையிலான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். பிரதமர் மோடி, அமைச்சர் அனிதா ஆனந்த் வருகை குறித்து, 'அவரது வருகை, இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மை உறவுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்; புதிய பங்களிப்பை தரும்' என தெரிவித்தார். முன்னதாக, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, அனிதா ஆனந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், இரு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: இரு நாட்டு மக்களின் நலன்களை பூர்த்தி செய்யும் விதமாக, இந்தியா -- கனடா ஒத்துழைப்பை மீண்டும் கட்டமைக்க வேண்டும். வணிகம், முதலீடு, விவசாயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், கனிமங்கள் உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும், சர்வதேச விவகாரங்களில் தீவிரமாக செயல்படுவதில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. நாங்கள், 'ஜி - 20' மற்றும் காமன்வெல்த் அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளோம். இந்தோ - -பசிபிக் பகுதியில் எங்கள் ஒருங்கிணைப்பு குறிப்பிடத்தக்கது. நாங்கள் பயனுள்ள பன்முகத்தன்மை, காலநிலை நடவடிக்கை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள். வலுவான கூட்டாண்மையை உருவாக்குவதன் வாயிலாக, சர்வதேச பொருளாதாரத்தை ஆபத்தில் இருந்து விடுவிக்க நாங்கள் முயல்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். 'நீண்ட காலம் தொடரும் உறவு' சந்திப்பின் போது கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியதாவது: இந்தியா - கனடா உறவை மேலும் வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுப்பதில் மகிழ்ச்சி. கனடாவில் நடந்த, 'ஜி - 7' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை வரவேற்றதில் எங்கள் பிரதமர் கார்னி மகிழ்ச்சியடைந்தார். அந்த சாதகமான நிகழ்வே, நாம் இங்கு நடத்தும் பேச்சுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. பேச்சின் முக்கிய அம்சமாக உள்ள இந்தியா- - கனடா கூட்டறிக்கை, இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான பரஸ்பர திட்டங்களை எடுத்துரைக்கும். இந்தோ- - பசிபிக் பிராந்தியத்தில் நம் பரஸ்பர முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும். சில வாரங்களுக்கு முன், இங்கு பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் தொடர்பாக எங்கள் அதிகாரிகள் நடத்திய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் உணர்ந்துள்ளன. இந்த உறவை நீண்ட காலம் முன்னெடுத்துச் செல்ல, நாங்கள் கூட்டாக உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
அக் 14, 2025 09:22

புதிக்கப்பட்டுள்ள இந்த புதிய உறவை நன்கு பயன்படுத்தி, கனடாவிலிருந்து நம் நாட்டிற்கு தலைவலி உண்டாக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளை அடியோடு வேரறுக்கவேண்டும். அதனால், நம் நாட்டில் பஞ்சாப் மாநிலமும் நம் நாடும் இன்னும் சிறப்பாக செயல்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை