கார் - பஸ் மோதல் 10 பக்தர்கள் பலி
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில் சொகுசு காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதியதில், கும்பமேளாவில் புனித நீராடச் சென்ற பக்தர்கள், 10 பேர் பலியாகினர். சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் அடங்கிய பக்தர்கள் குழுவினர், உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவில் பங்கேற்று, புனித நீராட 'போலேரோ' சொகுசு காரில் நேற்று முன்தினம் சென்றனர். பிரயாக்ராஜ் அருகே உள்ள மெஜா பகுதியில் இந்த கார் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் முழுமையாக சேதம் அடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்புக்குழு உதவியுடன் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். காரில் இருந்த 10 பேரும் உடல் நசுங்கி பலியானது தெரிய வந்தது. நீண்ட நேரம் போராடி அவர்களின் உடல்களை மீட்டனர். இதேபோல், விபத்துக்குள்ளான பஸ்சில் பயணித்த 19 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு, அருகே உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.