உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீதான வழக்கு ரத்து

மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீதான வழக்கு ரத்து

கொச்சி: கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 2019 செப்., 16ல், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்கள் வகுப் பறையில் சண்டையிட்டனர். அப்போது அங்கு வந்த கணித ஆசிரியர், அந்த மாணவர்களை பிரம்பால் அடித்து நிலைமையை கட்டுப்படுத்தினார். இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின்படி, கணித ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை ரத்து செய்யக்கோரி, கேரள உயர் நீதி மன்றத்தில் ஆசிரியர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சி.பிரதீப் குமார், சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு: வகுப்பறையில் தாங்கள் சண்டையிட்டதாகவும், அதை கட்டுப்படுத்தவே கணித ஆசிரியர் பிரம்பால் அடித்ததாகவும் மாணவர்களே வாக்குமூல த்தில் கூறி உள்ளனர். மேலும், மாணவர் களி ன் கால்களில் மட்டுமே ஆசிரியர் அடித்துள்ளார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம், 2019 செப்., 16ம் தேதி காலையில் நடந்துள்ளது. ஆனால், நான்கு நாட்கள் கழித்து, செப்., 20 இரவு 8:30 மணியளவில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த தாமதத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மாணவர்களிடம் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதே அவரது நோக்கம். மற்றபடி, காயத்தை ஏற்படுத்துவது அல்ல. ஆசிரியரின் இந்த செயல் மாணவர்களை திருத்துவதற்கும், நல்ல குடிமக்களாக மாற்றுவதற்கும் மட்டுமே. அத்தகைய நிலையில், அவர் தன் வரம்புக்கு உட்பட்டே செயல்பட்டுள்ளார். ஆசிரியரின் நல்ல நோக்கத்தை பெற்றோர் புரிந்துகொள்ள முடியாதது துரதிருஷ்டவசமானது. இது, தேவையற்ற வழக்குக்கு வழிவகுத்து விட்டது. எனவே, ஆசிரியர் மீதான கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி