ரோடு ஷோவில் பங்கேற்ற பஸ் உரிமையாளர்கள் மீது வழக்கு: சென்னப்பட்டணா ம.ஜ.த., வேட்பாளர் நிகிலை காப்பாற்ற முடிவு?
ராம்நகர்: முறையாக அனுமதி பெறவில்லை எனக்கூறி, சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி நடத்திய 'ரோடு ஷோ'வில், தொண்டர்களை அழைத்து வந்த 96 பஸ் உரிமையாளர்கள் மீது போலீசில் தேர்தல் ஆணையம் புகார் செய்துள்ளது .கர்நாடகாவில் சென்னப்பட்டணா, ஷிகாவி, சண்டூர் - தனி ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு நவ., 13ல் இடைத்தேர்தல் நடக்கிறது.வேட்புமனுத் தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாள். இம்மூன்று தொகுதிகளிலும் அன்றைய தினம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.இடைத்தேர்தல் அறிவித்தவுடன், ஷிகாவி, சண்டூர் தொகுதிகளுக்கு பா.ஜ., தன் வேட்பாளரை அறிவித்தது. ஆனால் சென்னப்பட்டணாவுக்கு மட்டும் அறிவிக்கவில்லை. அப்போதே இத்தொகுதி ம.ஜ.த.,விற்கு தான் என்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் பரவியது.இதனால் கோபமடைந்த யோகேஸ்வர், பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்து, வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்பாளர்
கடைசி நாளுக்கு முந்தைய நாள், தொகுதி தொண்டர்களுடன் தேவகவுடா, குமாரசாமி ஆலோசனை நடத்தி, நிகில் குமாரசாமியை வேட்பாளராகத் தேர்வு செய்தனர்.மறுநாள் தங்கள் பலத்தை காட்ட, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள், தொண்டர்கள் சென்னப்பட்டணாவில் குவிந்தனர்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் இரு சக்கர வாகனம், கார், பஸ்களில் வந்திருந்தனர். நகரின் செர்வா சதுக்கத்தில் இருந்து தாலுகா அலுவலகம் வரை பிரமாண்டமான ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓட்டு எண்ணிக்கை முடியும் நாள் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.இந்த காலகட்டத்தில் மத்திய - மாநில அரசு எந்த வாக்குறுதியும் அளிக்கக் கூடாது; வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது நடக்கும் ஊர்வலத்தில் எத்தனை வாகனங்கள் பங்கேற்க வேண்டும்; எத்தனை பேர் வர வேண்டும் உட்பட பல நிபந்தனைகள் இருக்கும். விதிமீறல்
தேர்தல் விதிமீறல் நடக்கிறதா என்பதை தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பர். அதன்படி, நேற்று முன்தினம் நடந்த நிகில் குமாரசாமியின் ஊர்வலத்தில், 96 தனியார் பஸ்களில் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.அவர்களிடம் விசாரித்தபோது, இந்த பஸ்கள் முறைப்படி அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக பஸ் உரிமையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மீது சென்னப்பட்டணா ஈஸ்ட் போலீஸ் நிலையத்தில் தேர்தல் ஆணையம் புகார் அளித்தது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.இதுதொடர்பாக பெங்களூரு ரூரல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் அளித்த பேட்டி:பஸ்களில் ஆட்களை அழைத்து வர, தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். மத்திய அமைச்சரான குமாரசாமிக்கு இது எப்படி தெரியாமல் போனது? அவருக்கு தெரியவில்லை என்றால், மோடியிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.தேர்தல் விதிமீறல் நடந்தால், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் தங்கள் கடமையை செய்வர். அதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எங்கள் மீது பழி சுமத்துவதையே தன் வேலையாக குமாரசாமி செய்து வருகிறார்.இவ்வாறு கூறினார்.அடக்குமுறை அரசுவேட்புமனுத் தாக்கலை பார்த்திருப்பீர்கள். வெள்ளிக்கிழமை மக்கள் வரக்கூடாதா? இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னப்பட்டணாவில் எத்தகைய தேர்தலை நடத்தப் போகின்றனர். எங்கள் கட்சித் தலைவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்ததன் மூலம், எத்தகைய தேர்தல் நடக்கிறது என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். மாநில காங்கிரஸ் அரசு அடக்குமுறையை செயல்படுத்துகிறது.குமாரசாமி,மத்திய கனரக தொழில்துறை அமைச்சர்