உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., துணை முதல்வர் குறித்து அவதுாறு பேச்சு; நகைச்சுவை பேச்சாளர் மீது பாய்ந்தது வழக்கு

மஹா., துணை முதல்வர் குறித்து அவதுாறு பேச்சு; நகைச்சுவை பேச்சாளர் மீது பாய்ந்தது வழக்கு

மும்பை : மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து அவதுாறு கருத்து தெரிவித்ததாக, நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்.,கின் மஹாயுதி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக உள்ளார்.

மேடை நிகழ்ச்சி

இவர், 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.,க்களுடன் அக்கட்சியில் இருந்து 2022ல் வெளியேறியதால், அப்போது ஆட்சியில் இருந்த உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அரசு கவிழ்ந்தது. பா.ஜ., கூட்டணிக்கு ஏக்நாத் ஷிண்டே ஆதரவு அளித்து, மஹாராஷ்டிர முதல்வரானார். சிவசேனா கட்சி பெயர், சின்னம், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு கிடைத்தது.கடந்த ஆண்டு நடந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சிவசேனா எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வரானார்.இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த, 'ஸ்டாண்டப் காமெடியன்' எனப்படும், நகைச்சுவை மேடை பேச்சாளர் குணால் கம்ரா என்பவர், சமீபத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.அதில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என விமர்சித்து, கிண்டலான கருத்துகளை தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள், மும்பையின் கார் என்ற இடத்தில் அந்த நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்ட, 'ஹாபிடட் ஸ்டூடியோ' மற்றும் அது அமைந்துள்ள, 'யுனிகான்டினென்டல்' ஹோட்டலை சூறையாடினர். சிவசேனா எம்.எல்.ஏ., முர்ஜி படேல் அளித்த புகாரின் அடிப்படையில், குணால் கம்ரா மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மன்னிப்பு

ஸ்டூடியோவை சூறையாடிய, 40க்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, விதிகளை மீறி 'ஹாபிடட் ஸ்டூடியோ' கட்டப்பட்டுள்ளதாக கூறி, அதை இடிப்பதற்காக பிர்ஹான் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சென்றனர்.பல இடங்களில் சுத்தியலால் உடைத்தனர். பின், ஸ்டூடியோவில் ஆய்வு மட்டுமே நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், “வாய்க்கு வந்ததை பேசிய குணால் கம்ரா நிச்சயம் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை பாயும்,” என்று முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்.

தமிழகத்தில் தஞ்சம்?

நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ராவுக்கு எதிராக மஹாராஷ்டிராவில் போராட்டம் வலுவடைந்த நிலையில், அவர் தலைமறைவாகி விட்டார். அவர், தமிழகத்துக்கு தப்பி வந்ததாக கூறப்படுகிறது. அவரை தொலைபேசியில் சிவசேனா தொண்டர் ஒருவர் மிரட்டியபோது, தமிழகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி குணால் கம்ரா பதிலளித்ததாக தெரிகிறது. இரண்டாவது முறையாக அந்த தொண்டர் பேசியபோதும் அதே பதிலை குணால் கூறியுள்ளார். இந்த உரையாடல் பதிவு நேற்று வெளியானது. ஏற்கனவே, புதுச்சேரியில் சில ஆண்டுகள் குணால் கம்ரா வசித்துள்ளார். எனவே, அங்கு இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என, குணால் கம்ரா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை