முதல்வர் மீதான முடா வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தேவையில்லை! லோக் ஆயுக்தா போலீஸ் விசாரணை தொடர உத்தரவு
தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து மனைவி பார்வதிக்கு 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டுமனைகளை வாங்கிக் கொடுத்ததாக, முதல்வர் சித்தராமையா மீது சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா குற்றச்சாட்டு கூறினார்.இந்த புகார் குறித்து முதல்வரிடம் விசாரிக்க அனுமதி வழங்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் அவர் மனுக் கொடுத்தார். அத்துடன் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய, மைசூரு லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிடும்படியும் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தார்.இதற்கிடையில் முதல்வரிடம் விசாரணை நடத்த கவர்னரிடம் இருந்தும், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்திடம் இருந்தும் அனுமதி கிடைத்தது. முதல் குற்றவாளி
இதையடுத்து வழக்கின் முதல் குற்றவாளியாக சித்தராமையா பெயரை மைசூரு லோக் ஆயுக்தா சேர்த்தது. கவர்னர் அனுமதிக்கு எதிராக சித்தராமையா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, கவர்னர் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறி இருந்தது.இந்நிலையில், 'லோக் ஆயுக்தா அமைப்பு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், முதல்வரிடம் அவர்களால் சுதந்திரமாக விசாரணை நடத்த முடியவில்லை. முதல்வருக்கு ஆதரவாக விசாரணைகளை மாற்றுகின்றனர்' என, புகார்தாரர் சிநேகமயி கிருஷ்ணா குற்றஞ்சாட்டினார். மேலும் முதல்வர் மீதான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார். என்ன சந்தேகம்
விசாரணைகளின்போது, சித்தராமையா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில், ''முதல்வர் மீது விசாரணை நடத்த கவர்னர் அளித்த அனுமதியை இந்த நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. லோக் ஆயுக்தா விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தால் அங்கீரிக்கப்பட்டது. மனுதாரர் தான் முதலில் லோக் ஆயுக்தா விசாரணை வேண்டும் என்றார். இப்போது அந்த அமைப்பு நடத்தும் விசாரணையில் சந்தேகம் உள்ளது என்று கூறுகிறார்.லோக் ஆயுக்தா விசாரணையில் என்ன சந்தேகத்தை கண்டார் என்று தெரியவில்லை. இது சி.பி.ஐ.,க்கு விசாரிக்கும் அளவுக்கு பெரிய வழக்கும் இல்லை. லோக் ஆயுக்தா விசாரித்து வரும்போது அந்த அமைப்பிடம் இருந்து தட்டிப்பறித்து சி.பி.ஐ.,க்கு கொடுப்பதும் சரியல்ல. சி.பி.ஐ.,க்கு ஏன் ஒப்படைக்க வேண்டும் என்பதை மனுதாரர் தரப்பு விளக்கவில்லை. முதல்வர் சம்பந்தப்பட்டு இருந்தால் தானாகவே சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று எந்த கொள்கையும் இல்லை,'' என்றார். சுதந்திர அமைப்பு
அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், 'லோக் ஆயுக்தா மாநில அரசுக்கு கீழ் வருகிறது என்றால், சி.பி.ஐ., மத்திய அரசுக்கு கீழ் வருகிறது. இதனால் சி.பி.ஐ.,யை சுதந்திரமான அமைப்பு என்று எப்படி சொல்ல முடியும்? சி.பி.ஐ., விசாரித்தால் சரியாக இருக்கும் என்று மனுதாரர் கருதினால், லோக் ஆயுக்தா விசாரணையும் சரியாக இருக்கும் என்பது எங்கள் வாதம். விசாரணை அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை.அதற்குள் சி.பி.ஐ., விசாரணை கேட்டால் எப்படி? அறிக்கை தாக்கல் செய்த பின், நீதிமன்றத்தில் விவாதம் நடக்கட்டும். முதல்வர் சம்பந்தப்பட்டு இருப்பதால் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்பது மனுதாரரின் வாதம். முதல்வரையும் விசாரிக்க முடியும் என்று சட்டம் கூறுகிறது. விசாரணை நடப்பதோடு முதல்வர் வழக்கின் முதல் குற்றவாளி என்றும் அறிவிக்கப்பட்டார். விசாரணை நடக்கிறது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளலாம், ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம்,'' என்றார். ஆவணம்
மனுதாரர் தரப்பு வக்கீல் மணிந்தர் சிங் வாதிடுகையில், ''இந்த வழக்கில் உயரிய பதவியில் இருக்கும் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருப்பதால், பொது நலனுக்காக இந்த வழக்கை சுதந்திரமான விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும். விசாரணை நியாயமாக நடத்தப்படவில்லை என்று பேசப்பட்டால், அதை விசாரணை அமைப்புக்கு மாற்ற நீதிமன்றம் தயங்கக் கூடாது. முதல்வர் விசாரணைக்கு ஆஜராகும் முன், எந்த நேரத்தில் விசாரணைக்கு செல்கிறேன், எப்போது வருவேன் என்று கூறிக் கொண்டு செல்கிறார். இதில் இருந்தே சுதந்திரமான விசாரணை நடக்கவில்லை என தெரிகிறது,'' என்றார்.இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி நேற்று காலை நீதிபதி நாகபிரசன்னா அளித்த தீர்ப்பு:லோக் ஆயுக்தா, சி.பி.ஐ., அமைப்புகளுக்கு விசாரணையின்போது கேள்வி கேட்கும் சுதந்திரம் முழுமையாக உள்ளது. லோக் ஆயுக்தாவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்தபோது, விசாரணையில் குறைபாடுகளோ அல்லது பாரபட்சமோ இருந்தது கண்டறியப்படவில்லை. எனவே சி.பி.ஐ., விசாரிக்க அல்லது மறுவிசாரணை நடத்த உத்தரவிட முடியாது.விசாரணை அமைப்புகள் வெளிப்புற சக்திகளால் பாதிக்கப்படுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறி உள்ளது. லோக் ஆயுக்தா விசாரணை பாரபட்சமாக நடக்கிறது என்பதை நிரூபிக்க மனுதாரர் ஆவணம் கொடுக்கவில்லை. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.இந்த தீர்ப்பின் மூலம் முதல்வர் சித்தராமையா மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஒருவேளை சி.பி.ஐ., விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்து இருந்தால், சித்தராமையாவின் முதல்வர் பதவி கூட காலியாகும் சூழ்நிலை இருந்தது. இந்த தீர்ப்பின் மூலம் முதல்வர் பதவியை தக்கவைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.