உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்திய அரசு... மறுப்பு! அரசியலமைப்பு விழாவில் பிரதமர் மோடி பேசவில்லை

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்திய அரசு... மறுப்பு! அரசியலமைப்பு விழாவில் பிரதமர் மோடி பேசவில்லை

புதுடில்லி: “அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன், 75வது ஆண்டை முன்னிட்டு பார்லிமென்ட் வளாகத்தில் இன்று நடக்கும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை. நிகழ்ச்சி நிரல் தெரியாமல் எதிர்க்கட்சிகள் தவறான விமர்சனங்களை முன்வைக்கின்றன,” என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம், 1949 நவ., 26ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1950 ஜன., 26ல் அமலுக்கு வந்தது.பின்னர், 2015 முதல் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நவ., 26, அரசியல் அமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன் 75வது ஆண்டையொட்டி, இந்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பார்லிமென்டில் கூட்டுக் கூட்டத்துக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

சிறப்பு நிகழ்ச்சி

இந்தக் கூட்டத்தில் இரு சபைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களையும் பேச அனுமதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் சார்பில், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசியலமைப்பு தின விழா நிகழ்ச்சிகள் தொடர்பாக, மத்திய அரசு சார்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய கலாசார துறை செயலர் அருனிஷ் சாவ்லா, இது தொடர்பாக விளக்கினார். மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, அர்ஜுன் ராம் மெஹ்வால், கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் நிகழ்ச்சி தொடர்பாக நிருபர்களிடம் விளக்கினர்.பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:அரசியலமைப்பு தினம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. நீதித்துறை, அரசு நிர்வாகம், பார்லிமென்ட் - சட்டசபைகளுக்கான நிகழ்ச்சி மட்டும் அல்ல. ஒட்டுமொத்த நாடும் இதில் பங்கேற்கிறது. அரசியலமைப்பின் முன்னுரையை படிப்பது உட்பட, நாடு முழுதும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, அதை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபை அமர்ந்த பழைய பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில், சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் மட்டுமே பேச உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசப் போவதில்லை.

கண்டனம்

ஆனால், நிகழ்ச்சி நிரல் என்னவென்று தெரியாமல், தெரிந்து கொள்ளாமல், எதிர்க்கட்சிகள் அவசர அவசரமாக விமர்சனங்களை முன்வைத்துள்ளன; இது அவமானமாகும். உண்மையில், நிகழ்ச்சி மேடையில், இரு சபைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களும் அமர உள்ளனர். இந்த உண்மைகள் தெரியாமல் விமர்சிப்பது கண்டனத்துக்கு உரியது.அரசியலமைப்பின் 75வது ஆண்டு விழா என்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. அதில் நாமும் பங்கேற்க உள்ளதை பெருமையாக கருத வேண்டும். ஜனநாயகத்தின் வெற்றியை உறுதி செய்வதே அரசியலமைப்பு. எனவே, அது தொடர்பான வீண் விமர்சனங்களை முன்வைப்பது முறையானதல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

சபாநாயகருக்கு கடிதம்!

முன்னதாக, எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி சார்பில், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் பாலு, சிவா, கனிமொழி, ஆம் ஆத்மியின் ராகவ் சத்தா, தேசியவாத காங்., - சரத் பவார் பிரிவின் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:அரசியலமைப்பின் 75வது ஆண்டையொட்டி நடக்கும் விழாவில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்க உள்ளனர். இவர்கள், இந்த நிகழ்ச்சியில் பேச உள்ளதாக அறிகிறோம். பார்லிமென்ட் ஜனநாயகம் மற்றும் மரபுகளை மதிக்கும் வகையில், இரு சபைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பேசுவதற்கு வாய்ப்பு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி