உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூன்று அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு

மூன்று அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: பணியில் அலட்சியமாக இருந்த மூன்று அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கும்படி, 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனம், டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் முறையிட்டது. இது தொடர்பான விசாரணைக்கு பின், பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளில் அலட்சியமாக செயல்பட்ட மூன்று அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ., உத்தரவிட்டுஉள்ளது.

விதிமீறல்

இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:விமானக் குழுவினரின் பணி நேரங்களை திட்டமிடுதல், உரிமங்களில் உள்ள குறைபாடுகளை கருத்தில் கொள்ளாமல் செயல்படுதல், ஓய்வு அளித்தல் மற்றும் உடனடி தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றவற்றில் கடுமையான விதிமீறல்கள் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் கவலை தெரிவித்தது. இதையடுத்து, இயக்குநரகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், அலட்சியமாக செயல்படுதல், பணியில் கவனம் இல்லாதது போன்ற நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விதிமீறல்களுக்கு காரணமான, தங்களது பொறுப்பை சரியாக செய்யாத அதிகாரிகளுக்கு எதிராக, ஏர் இந்தியா நிறுவனம் முறையான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பதும் தெரிய வந்தது. அவ்வாறு அலட்சியமாக செயல்பட்ட மண்டல துணைத் தலைவர் உட்பட மூன்று பேரை உடனடியாக பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்படுகிறது. அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 10 நாட்களுக்குள் ஏர் இந்தியா நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், விமானம் இயக்குவதற்கான உரிமத்தை இடைநீக்கம் செய்வது, செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிருப்தி

இந்த உத்தரவு உடனடியாக செயல்படுத்தப்பட்டதாக, ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது. கடந்த 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 270 பேர் உயிரிழந்தனர். இந்த சூழலில், பணியில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீதான நடவடிக்கைக்கு டி.ஜி.சி.ஏ., உத்தரவிட்டு இருப்பது, அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

விமான பணியாளர்களின் பணி நேர வரம்புகளுக்கான விதிமுறைகளை மீறியது குறித்து விளக்கமளிக்க, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 'ஏர் இந்தியாவின் பொறுப்பு மேலாளர் கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் பெங்களூரில் இருந்து லண்டனுக்கு இரண்டு விமானங்களை இயக்கி உள்ளார். இவை இரண்டும் நிர்ணயிக்கப்பட்ட 10 மணி நேர பயண நேரத்தை தாண்டி உள்ளது. இது விதிமீறலாகும். இந்த விதிமீறலின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து, ஏழு நாட்களுக்குள் ஏர் இந்தியா நிறுவனம் பதிலளிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

திரைப்பட இயக்குநர் உயிரிழந்தது உறுதி

குஜராத்தின் ஆமதாபாதில், ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய கடந்த 12ம் தேதியில் இருந்து, குஜராத்தி திரைப்பட இயக்குநர் மகேஷ் ஜிராவாலா, 34, என்பவரை காணவில்லை என, அவரது மனைவி ஹீத்தல் போலீசில் புகார் அளித்தார். விபத்து நடந்த அன்று மதியம் லா கார்டன் பகுதியில் ஒருவரை சந்திக்க சென்றதாகவும், அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை எனவும் புகாரில் தெரிவித்து இருந்தார்.போலீஸ் விசாரணையில், மகேஷின் மொபைல் போன், விபத்து நடந்த இடத்திலிருந்து 700 மீட்டர் தொலைவில் கடைசியாக 'சுவிட்ச் ஆப்' ஆனது கண்டறியப்பட்டது. மேலும், அவரது ஸ்கூட்டரும் தீ விபத்தில் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சியிலும் அவர் சென்றது பதிவாகி இருந்தது. இன்ஜின் மற்றும் சேஸிஸ் எண்ணும் ஸ்கூட்டரின் பதிவு ஆவணங்களுடன் பொருந்தியதால், உறவினர்களிடம் டி.என்.ஏ., மாதிரி எடுக்கப்பட்டது. இந்த சோதனையில், விமான விபத்தில் சிக்கி மகேஷ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. விமானம் விழுந்த சமயம் அந்த வழியாக பயணித்த அவர் விபத்தில் சிக்கியதை போலீசார் உறுதி செய்தனர். அடையாளம் காணப்பட்ட அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை