உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோர்லா விபத்தால் போலீசில் சிக்கிய தாய்

சோர்லா விபத்தால் போலீசில் சிக்கிய தாய்

சோர்லா விபத்து காரணமாக நான்கு வயது மகனைக் கொன்ற தாய், போலீசில் சிக்கியதாக டிரைவர் தெரிவித்துள்ளார்.பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில், தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் சுச்சனா சேத், 39. இவரது மகன் சின்மய் ரமணன், 4. கோவாவில் 7ம் தேதி மகனை, சுச்சனா சேத் கொலை செய்தார். சூட்கேசில் மகன் உடலை வைத்து அடைத்தார்.கோவாவில் இருந்து வாடகை கார் மூலம், பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் தங்கியிருந்த அறையில் ரத்தம் இருந்தது குறித்து, வாடகை கார் டிரைவர் ராய் ஜோகன் டிசோசாவுக்கு, கோவா போலீசார் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சித்ரதுர்கா ஐமங்களா போலீஸ் நிலையத்தில், சுச்சனாவை, கார் டிரைவர் ஒப்படைத்தார்.

சூட்கேஸ் கனம்

சுச்சனா போலீசில் சிக்கியது எப்படி என்பது குறித்து, வாடகை கார் டிரைவர் ராய் ஜோகன் டிசோசா நேற்று அளித்த பேட்டி:கோவாவில் இருந்து பெங்களூரு நாகவாராவில் உள்ள, மான்யதா டெக் பார்க் செல்ல, சுச்சனா 30,000 கொடுத்து, வாடகை கார் முன்பதிவு செய்தார். அவர் தங்கியிருந்த அறையில் இருந்து, பெரிய சூட்கேசை துாக்கி வந்தேன். சூட்கேஸ் கனமாக இருந்தது பற்றி அவரிடம் கேட்டேன். அதற்கு சூட்கேசுக்குள் சில கனமான பொருட்கள் இருப்பதாக கூறினார்.பெலகாவி, ஹுப்பள்ளி, தாவணகெரே, சித்ரதுர்கா, துமகூரு வழியாக, பெங்களூரு செல்ல திட்டமிட்டு இருந்தோம். தாவணகெரேயை தாண்டி சித்ரதுர்கா நோக்கி வந்து கொண்டு இருந்தோம். அப்போது என்னிடம் கோவா போலீசார் பேசினர். 'பதற்றம் அடைய வேண்டாம். பக்கத்தில் இருக்கும் போலீஸ் நிலையம் சென்று பெண்ணை ஒப்படையுங்கள்' என்றனர்.

கூகுளில்

எனது மொபைல் போனில் கூகுள் உதவியுடன் அருகில் போலீஸ் நிலையம் எவ்வளவு துாரத்தில் உள்ளது என்று தேடிப் பார்த்தேன். ஐமங்களா போலீஸ் நிலையம் 50 கி.மீ., துாரத்தில் உள்ளதாக காட்டியது. தாவணகெரே போலீஸ் நிலையத்தை கடந்து 20 கி.மீ., வந்ததை உணர்ந்தேன்.காரை திருப்பினால், சுச்சனாவுக்கு சந்தேகம் வரும் என்று, ஐமங்களாவுக்கு காரை ஓட்டிச் சென்றேன். ஐமங்களா போலீஸ் நிலையத்தில் அவரை ஒப்படைத்தேன். போலீசார் சூட்கேசை திறந்து பார்த்தபோது, துணிகள் நிறைய இருந்தன. துணிகளை அகற்றியபோது, சின்மய் உடல் இருந்தது. போலீசில் சிக்கினாலும், எந்த பயத்தையும் சுச்சனா வெளிகாட்டவில்லை.பெலகாவியில் இருந்து ஹுப்பள்ளிக்கு வரும் வழியில், சோர்லா வனப்பகுதி சாலையில், இன்னொரு வாகனம் விபத்தில் சிக்கியதால், அங்கு நான்கு மணி நேரம் சிக்கினோம். ஒருவேளை அந்த விபத்து நடந்திருக்காவிட்டால், சுச்சனா பெங்களூரை அடைந்திருப்பார். போலீசிடம் இருந்தும் தப்பித்து இருக்கலாம். விபத்து நடந்ததால் போலீசில் சிக்கிக் கொண்டார்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில் சுச்சனா தங்கியிருந்த அறையில் இருந்து, கோவா போலீசார் கிழிந்த நிலையில், 'டிஸ்யு' பேப்பர் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில் 'ஐ லைனரால்' ஏதோ எழுதப்பட்டு இருந்தது. அதில் என்ன எழுதப்பட்டு இருந்தது என்பதை அறிய, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.மகனை கொன்றதை ஒப்புக்கொண்ட சுச்சனா, எதற்காக கொலை செய்தேன் என்பதை கூற, தொடர்ந்து மறுத்து வருகிறார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி