லடாக் யூனியன் பிரதேசத்துக்கான குடியுரிமை விதிகள் வெளியீடு
லடாக்: லடாக் யூனியன் பிரதேசத்திற்கான புதிய இடஒதுக்கீடு மற்றும் குடியுரிமை விதிகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி, வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய பா.ஜ., அரசு 2019 ஆகஸ்டில் ரத்து செய்ததை அடுத்து, அம்மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.அப்போது முதலே, லடாக்கில் மொழி, கலாசாரம், நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி, அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாக போராடி வந்தனர். இதற்கு தீர்வு காண, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையில் உயர்மட்டக் குழு, 2023 ஜனவரியில் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், லடாக்கின் பிரதிநிதிகளுடன் பலமுறை சந்தித்து பேச்சு நடத்தினர். இந்நிலையில், லடாக்கிற்கான புதிய இடஒதுக்கீடு மற்றும் குடியுரிமை விதிகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி, வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. லடாக்கில், 15 ஆண்டுகள் வசித்தவர்கள் அல்லது அங்குள்ள கல்வி நிறுவனங்களில் ஏழு ஆண்டுகள் பயின்று, 10 அல்லது பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள், ராணுவம் அல்லாத பிற துறைகளில் பணியாற்ற தகுதி பெறுவர்.லடாக்கில், 10 ஆண்டுகள் பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் அதிகாரிகளின் குழந்தைகள், லடாக் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள். பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு 10 சதவீதம் என்பதில், எந்த மாற்றமும் இல்லை.மேலும், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் சட்டம் - 1997ல் திருத்தம் செய்யப்பட்டு, கவுன்சிலின் மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இந்த இடங்களை, வெவ்வேறு பிராந்திய தொகுதிகளுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கலாம். இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.