உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக் ஆயுக்தா விசாரணைக்கு முதல்வரின் மைத்துனர் ஆஜர்!: முடா முறைகேடு குறித்து கிடுக்கிப்பிடி கேள்விகள்

லோக் ஆயுக்தா விசாரணைக்கு முதல்வரின் மைத்துனர் ஆஜர்!: முடா முறைகேடு குறித்து கிடுக்கிப்பிடி கேள்விகள்

மைசூரு:'முடா' முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, அவருக்கு நிலத்தை விற்ற தேவராஜு ஆகியோர் நேற்று லோக் ஆயுக்தா போலீசார் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு, போலீசார் திணறடித்தனர்.'முடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், முறைகேடு நடந்ததாகவும், முதல்வர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக, மைசூரு லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்யப்பட்டது. கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்ததை எதிர்த்து முதல்வர் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விசாரணை அவசியம்

மேலும், முறைகேடு நடந்துள்ளதற்கான சாத்தியம் இருப்பதால், விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா தீர்ப்பில் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், மைசூரு லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது. டிசம்பர் 24ம் தேதிக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தியது.இதன் அடிப்படையில், ஏ 1 ஆக முதல்வர் சித்தராமையா, இவரது மனைவி ஏ 2 பார்வதி, மைத்துனர் ஏ 3 மல்லிகார்ஜுன சுவாமி, நிலத்தை விற்ற ஏ 4 தேவராஜு ஆகியோர் மீது லோக் ஆயுக்தா போலீசார், கடந்த செப்டம்பர் 27ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.முதலாவதாக புகார்தாரரான சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணாவிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. சர்ச்சைக்குரிய நிலத்துக்கு அழைத்து சென்று ஆய்வு செய்யப்பட்டது.இதற்கிடையில், தனக்கு ஒதுக்கிய 14 மனைகளையும் முதல்வரின் மனைவி பார்வதி, முடாவுக்கு திருப்பி வழங்கினார். முடாவும், பார்வதி பெயரில் பதிவாகி இருந்த பட்டாவை ரத்து செய்தது.இதற்கிடையில், முதல்வரின் மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, நிலத்தை விற்ற தேவராஜு ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி, லோக் ஆயுக்தா போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

சரமாரி கேள்வி

இதன்படி, மல்லிகார்ஜுன சுவாமி நேற்று காலை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் லோக் ஆயுக்தா எஸ்.பி., உதேஷ் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது.தேவராஜிடம் இருந்து, எவ்வளவு ரூபாய்க்கு, எப்போது நிலம் வாங்கப்பட்டது; ரொக்கம் அல்லது வங்கியில் பணம் செலுத்தப்பட்டதா; அதற்கான ரசீது உள்ளதா; வாங்கிய நிலம், சகோதரி பார்வதிக்கு எதற்காக வழங்கப்பட்டது; அவருக்கு இலவசமாக வழங்கப்பட்டதா அல்லது பணம் வாங்கி கொண்டு வழங்கப்பட்டதா என பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு திணறடித்தனர்.இதுபோன்று, நிலத்தை விற்ற தேவராஜிடமும் லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தினார். எவ்வளவு ரூபாய்க்கு நிலம் விற்பனை செய்யப்பட்டது; ரொக்கமாக பெறப்பட்டதா; மல்லிகார்ஜுன சுவாமிக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு உட்பட இவரிடமும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைக்கு அழைத்தால் மீண்டும் வர வேண்டும் என்று அறிவுறுத்தி, இருவரையும் அனுப்பி வைத்தனர்.வழக்கில் குறிப்பிட்டுள்ள நால்வரில், இருவரிடம் நேற்று முதல் கட்ட விசாரணை முடிந்து விட்டது. அடுத்ததாக ஏ 1 முதல்வர் சித்தராமையா, ஏ 2 பார்வதி ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இவர்களுக்கு லோக் ஆயுக்தா போலீசார் எப்போது சம்மன் அனுப்புவர் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.மற்றொரு புறம், இந்த முறைகேடு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். தசரா விடுமுறை முடிந்து, முடா முறைகேடு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை