கிருஷ்ணா ஆற்றில் நிலக்கரி சாம்பல் கலப்பு
ராய்ச்சூர்; அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல், கிருஷ்ணா ஆற்றில் கலப்பதால், தண்ணீரை குடிக்க மக்கள் தயங்குகின்றனர்.ராய்ச்சூர் அருகே சக்தி நகரில் ஆர்.டி.பி.எஸ்., எனும் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு மாநிலத்திற்கு தேவையான 45 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்திக்காக நிலக்கரி எரிக்கப்படுகிறது. அப்போது வெளி வரும் சாம்பலை கட்டுப்படுத்த, சரியான மேலாண்மை அமைப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.இதனால் அனல் மின் நிலையத்தின் அருகே ஓடும், கிருஷ்ணா ஆற்றில் நிலக்கரி சாம்பல் கலக்கப்படுகிறது. இதனால் ஆற்று நீர் நிறம் மாறுகிறது. கிருஷ்ணா ஆற்றின் தண்ணீர் தான், ராய்ச்சூர் நகரின் குடிநீர் தேவையை நிறைவேற்றுகிறது.ஆற்றில் நிலக்கரி சாம்பல் கலப்பதால், தண்ணீரை குடிக்கவே மக்கள் பயப்படுகின்றனர். மின் நிலையத்தில் சாம்பலை கட்டுப்படுத்த சரியான மேலாண்மை அமைப்பு இல்லாமல், தங்கள் உயிருடன் அதிகாரிகள் விளையாடுவதாக மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.இதற்கு முன்பு ஆற்றில், சாம்பல் நேரடியாக கொட்டப்பட்டது. இதனால் மக்கள் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டனர். மக்கள் போராட்டத்தால் சாம்பல் கொட்டுவது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.'அனல் மின் நிலைய அதிகாரிகள் மீது, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ராய்ச்சூர் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.