உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் எதிரொலி கார் விலையை குறைத்த நிறுவனங்கள்

ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் எதிரொலி கார் விலையை குறைத்த நிறுவனங்கள்

புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில், சீர்திருத்தங்கள் செய்யப்பட்டதை அடுத்து, கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களின் விலையை குறைத்து உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, சமீபத்தில், ஜி.எஸ்.டி., வரியில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டடுக்கு வரி விகிதங்கள் அமலுக்கு வரவுள்ளது. அந்த வகையில், சிறிய கார்களுக்கான ஜி.எஸ்.டி., வரி, 28ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், பெரிய சொகுசு கார்களுக்கான வரி, 28ல் இருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. புதிய வரி நடைமுறை, வரும் 22 முதல் அமலாக உள்ள நிலையில், பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள், தற்போதே கார்களின் விலையை குறைத்துள்ளன. அதன்படி, 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், தங்கள் கார்களுக்கான விலையை, 1.40 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது. 'மஹிந்திரா அண்டு மஹிந்திரா' நிறுவனம், கார்களுக்கான விலையை, 1.56 லட்சம் ரூபாய் வரை குறைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 'ரெனால்ட் இந்தியா' நிறுவனம், கார்களுக்கான விலையை, 95,000 ரூபாய் வரை குறைத்துள்ளது. இந்த வரிசையில், 'மாருதி சுசூகி' நிறுவனமும், கார்களுக்கான விலையை, 6 - 9 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !