ஆந்திராவில் கூட்டு குடும்பங்களுக்கு சலுகை
ஆந்திராவில், 15 ஆண்டுகளுக்கு முன், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றவர்களை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதை தடுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, தற்போது அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வலியுறுத்தி வருவதோடு, அதை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு சலுகைகளை அள்ளி வீசி உள்ளார்.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 15 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியில் இருந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதை தடுத்தார். இது அப்போது பேசு பொருளானது.கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, முதல்வராக பதவியேற்றது முதல், அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் பற்றி பேசி வருகிறார்.நிலம், பணத்தை விட மக்கள்தொகை ஒரு நிலையான சொத்து எனக் குறிப்பிடும் சந்திரபாபு நாயுடு, கருவுறுதல் விகிதம் குறைவது மனித வள நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும், தேசிய அளவில் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் என்றும் தெரிவித்தார். விருப்பம் இல்லை
நாட்டின் கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கூட்டுக் குடும்ப முறைக்கு மீண்டும் மாற வேண்டும் என்றும் சமீப காலமாக அவர் பேசி வருகிறார்.இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆந்திர மக்களின் மன நிலையை அறிய, மாநில அரசு சார்பில் சர்வே நடத்தப்பட்டது. அதில், 64 சதவீத மக்கள் இரண்டு குழந்தைகள்; 12.34 சதவீதம் பேர் ஒரு குழந்தை; 20 சதவீதம் பேர் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புவது தெரிய வந்தது.நிலையற்ற வேலை மற்றும் வருமானம் காரணமாக, 20 சதவீத இளைஞர்கள் திருமணம் செய்ய விரும்பவில்லை. கூட்டுக் குடும்ப அமைப்பில் குழந்தைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என, 67 சதவீதம் பேர் நம்புகின்றனர்.மேலும், 6.54 சதவீதம் பேர் மட்டுமே தனி குடும்பத்தை விரும்புகின்றனர்; தனி குடித்தனத்தால், 80 சதவீத இளம் தம்பதியர் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. கல்வி மற்றும் மருத்துவ பராமரிப்புக்கு அதிக செலவாவதால், இரண்டாவது குழந்தையை பெற தம்பதியர் மறுப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.அமராவதியில், உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், இந்த சர்வே குறித்து விவாதிக்கப்பட்டது. கை கொடுக்குமா?
அதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்க சமூக மற்றும் மானியத் திட்டங்களை அரசு மாற்றி அமைக்கும். அதிக குழந்தைகள் பெறுவது ஒரு சுமை அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். குழந்தைகள் அதிகமாக இருந்தால் பொறுப்பை அரசு பகிர்ந்து கொள்ளும்.கூட்டுக் குடும்பத்திற்கு செல்வது குறித்து மக்கள் பரிசீலனை செய்ய வேண்டும்; இது உலகிலேயே சிறந்தது. கூட்டுக் குடும்ப முறை மன அழுத்தத்தை நீக்கும். இப்போதெல்லாம் குடும்பப் பெரியவர்களின் மத்தியஸ்தம் இல்லாததால், விவாகரத்து சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.கூட்டுக் குடும்ப முறைக்கு மாற ரேஷன் கடைகளில் கூடுதலாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். அரசு சார்பில் குடும்பத்துக்கு ஏற்ப பெரிய வீடுகள் கட்டப்படும். குழந்தைகளை கவனித்துக்கொள்ள வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அரசு ஊக்குவிக்கும். ஒரு குடும்பத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இருந்தால், அது ஒரு பெரிய சொத்து. இவ்வாறு அவர் பேசினார்.லோக்சபாவில் ஆந்திராவின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், கருவுறுதல் வகிதத்தை உயர்த்தவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொள்ளும் முயற்சிகள் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் - நமது சிறப்பு நிருபர் -.