பெங்களூரு : ஹுப்பள்ளியில் 2022ல் நடந்த கலவர வழக்கில் கைதான 106 பேருக்கு ஜாமின் வழங்கி, கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ஹுப்பள்ளி டவுன் பழைய ஹுப்பள்ளியில் உள்ள மசூதியின் மீது, மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் கொடி பறப்பது போன்று, சமூக வலைத்தளங்களில் 2022ல் புகைப்படம் வெளியானது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சமூக வலைத்தளத்தில் புகைப்படம் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பழைய ஹுப்பள்ளி போலீஸ் நிலையம் முன், ஒரு சமூகத்தினர் போராட்டம் நடத்தினர்.சிறிது நேரத்தில் போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸ் நிலையம், வீடுகள் மீது கலவரக்காரர்கள் கல்வீசித் தாக்கினர். போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஹுப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி கவுன்சிலர் நசீர் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கில் ஜாமின் கேட்டு 39 பேர், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, ஜாமின் பெற்றனர். இதையடுத்து மேலும் 106 பேர் ஜாமின் கேட்டு, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் சீனிவாஸ் ஹரிஷ்குமார், வெங்கடேஷ் நாயக் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், மனுதாரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், அவர்களுக்கு ஜாமின் வழங்கும்படி கேட்டுக் கொண்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 106 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் போலீஸ் நிலையம் சென்று, கையெழுத்து போட வேண்டும். சாட்சிகளை அழிக்க முயற்சிக்க கூடாது. இரண்டு லட்சம் ரூபாய், பிணைய தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.கலவரக்காரர்களுக்கு ஜாமின் கிடைத்ததற்கு, கர்நாடகா அரசை, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றஞ்சாட்டி உள்ளார்.''மாநில அரசின் பொறுப்பற்ற தன்மையால், கலவரக்காரர்கள் 106 பேருக்கு ஜாமின் கிடைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, கலவரக்காரர்களை காப்பாற்றும் முயற்சி நடந்தது. ''அரசு தரப்பில் நீதிமன்றத்தில் சரியான வாதங்கள் முன்வைக்கப்படவில்லை. இதற்கான விளைவுகளை, காங்கிரஸ் சந்திக்க நேரிடும்,'' என, அவர் தெரிவித்தார்.